பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19. சிலப்பதிகாரம்

(1) சிலப்பதிகார காலம்

சோழன் கரிகாலன்

கோவலன்-கண்ணகி திருமணத்தின் இறுதியில் 'இமயத்தில் புலிப்பொறி பொறித்த சோழன் தன் திகிரியை உருட்டுவோனாகுக ! , என்று சொல்லித் திருமணத்திற்கு வந்திருந்தோர் வாழ்த்தினர் என்னும் பகுதியில், அடியார்க்கு நல்லார், அச்சோழனைக் கரிகாலன் என்று குறித்துள்ளார். கரிகாலனது வடநாட்டு வெற்றி, இந்திர விழவூர் எடுத்த காதையில் (வரி 87-104) விரிவாய்க் குறிக்கப்பட்டுள்ளது. அடுத்துக் கானல் வரியில், சோழன் கங்கை வரையில் சென்று மீண்டமை குறிப்பாய் உணர்த்தப்பட்டுள்ளது: கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி' -இங்ஙனம் கங்கை வரையில் சென்று மீண்ட சங்க காலச் சோழன் கரிகாலன் ஒருவனே ஆவான். இவை அனைத்தையும் நோக்க, கோவலன்-கண்ணகி திருமணம் நடைபெற்ற போது கரிகாலனே சோழப் பேரரசனாய் இருந்தான் என்பதுதெளிவாகிறது.

சோழவேந்தன் ஒருவன், முதல் கயவாகு வேந்தனுக்கு முற்பட இருந்த வங்க நாஸிகதிஸ்ஸன் (கி. பி. 111-114) காலத்தில் இலங்கையின்மீது படையெடுத்துப் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோழ நாட்டுக்குக் கொண்டு சென்றான், அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரையிடுவித்தான் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது.[1] இங்ங்னம் செய்தவன் கரிகாலனே என்பது

-


  1. 1. The History of Ceylon, Vol. I, Part I, pp. 175– 182, -