பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழ் மொழி - இலக்கிய வரலாறு

கிளைத்ததாகும். கோத்தர் மொழியும் பழைய கள்னடத்தோடு தொடர்புடையது. கோந்த் மொழி தமிழ் மொழியுடன் நெருங்கிய ஒற்றுமையுடையது. கூ அல்லது கந்த்மொழி தமிழையும் கன்னடத்தையும் தழுவியுள்ளது. ராஜ்மஹாலிலும் ஒரொவளிலும் திராவிடச் சொற்கள் நிரம்பவுள்ளன.[1]

துதவர் மொழியும் கோத்தர் மொழியும் நீலகிரி மலைகளில் வாழும் துதவரும் கோத்தரும் பேசும் மொழிகள். கோந்த் மொழி நடு இந்திய மலைவாணருள் பெரும் பிரிவினர் பேசுவது. கூ அல்லது கந்த் மொழி பேசுவோர் கோந்த் வானாவின் கிழக்குப்பகுதி, ஒரிஸ்ஸா மலைத் தொடர்கள், பஸ்தர் வரையிலுள்ள மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். ஒரொவன் மொழி நடு மாகாணத்து நாகபுரியிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மலைப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. ராஜ்மஹால் மொழி வங்க மாநிலத்தில் கங்கையாற்றுக்குத் தெற்கே உள்ள ராஜ்மஹால் மலைகளிலுள்ள மக்களால் பேசப்படுவது.

இவை செப்பஞ் செய்யப்படாத மொழிகளாயினும் தென்னாட்டு மொழிகளை ஒத்திருத்தலை நோக்க, இம்மொழிகள் பரவியிருந்த-இருக்கின்ற இடங்களை நோக்க, ஆரியர் வருகையால் சிதறுண்ட இம்மக்கள் மலைப்பகுதிகளிற் சென்று வாழலாயினர் என்பதும், அங்ஙனம் சென்ற போதிருந்த நிலைமையிலேயே இம்மொழிகள் பெரிதும் அமைந்துள்ளன என்பதும், பின்னர் ஆரிய மக்கள் தொடர்பால் மிகச் சிறிதளவே இவை வேறுபட்டுள்ளன என்பதும் ஈண்டு உணரத்தகும் செய்திகளாகும்.

வட இந்தியாவில் திராவிடம் பலுசிஸ்தானத்தின் வட பகுதியில் ‘பிராஹுய்’ என்னும் மொழி ஒன்று வழக்கில் உள்ளது. மலைவாணர் அம்மொழியைப் பேசுகின்றனர். அது திராவிட மொழியைச் சேர்ந்தது.

  1. Compantive Grammar, pp. 625-632.