பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

347


ஆசிரியர் அதனைச் சிறிது இளகல் நடையில் பாடினார் எனக் கொள்வது பொருத்தமாகும்.

நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் மறைமலையடிகள் திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை பாடியுள்ளார். அஃது ஏறத்தாழச் சங்ககால நடையை ஒத்துள்ளது. அவர் காலத்தில் வாழ்ந்த பாரதியார் பாடல்கள் எல்லோருக்கும் புரியத் தகும் முறையிலும் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்த நிலையிலும் அமைந்துள்ளன. அன்று ஆண்டுகள் கழித்து இவ்விரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்யும் ஒருவர். மறைமலையடிகள் பாடல்நடை மிடுக்கும் தூய்மையும் கொண்டுள்ளதால், அவர் பாரதியாருக்கு முற்பட்டவர் என்று கூறுதல் பொருத்தமாகுமா?

இவை அனைத்தையும் ஆழ நினைந்து பார்ப்பின், தொகைநூற் பாடல்களின் நடை மிடுக்கிற்கும் சிலப்பதிகார நடையின் மிடுக்கற்ற தன்மைக்கும் வடசொற்கள் மிகுதியாக இருத்தற்கும் அடிப்படைக் காரணங்கள் நன்கு புலனாகும். மிடுக்குத் தளர்ந்த நடையையும் சொற்கள் மிகுதியையுமே கொண்டு, காலத்தை உணர்த்தும் வரலாற்று உண்மைகளை அறவே கைவிட்டுச் சிலப்பதிகாரம் தொகை நூல்களுக்குப் பிற்பட்டது என்று எளிதில் முடிபு கூறுதல் ஆராய்ச்சி அறமாகாது.

(2) சிலப்பதிகாரம்

காவியத்தின் சிறப்பு

சிலப்பதிகாரம் ஆசிரியப்பாவால் அமைந்த முப்பது நீண்ட பாடல்களைக் கொண்ட பெருநூல். ஒவ்வொரு நீண்ட பாடலும் ஒரு காதை எனப்படும்.

கோவலனும் கண்ணகியும் சோழநாட்டுப் புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தனர்; பின்பு வறுமையுற்று வாணிகம் செய்யப் பாண்டியநாட்டு