பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

351

இது சிலப்பதிகாரம் கூறும் செய்தியாகும். தாய் மொழிப்பற்று மிகுந்த இளங்கோவடிகள் இதனைப் பல இடங்களில் உணர்ச்சியோடு கூறியுள்ளார்.

அக்காலப் பெருவழிகள்

காடுகாண் காதையில், மாங்காட்டு மறையவன், கொடும் பாளூரிலிருந்து மதுரைக்குச் சென்ற மூன்று வழிகளைக் கூறும் பகுதி மிக்க சுவையுடையது. கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கொடும்பாளூர் வரையில் சென்ற வழியும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறே, சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரிலிருந்து கங்கையாறு வரையிலும் சென்ற பெருவழியும் கவனிக்கத்தக்கது. அக்காலத்தில் மாடலன் போன்ற மறையவரும் பிறரும் கங்கையிலிருந்து குமரிவரையிலும் தலயாத்திரை செய்தனர் என்பதனை நோக்க, வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைத்த பெருவழிகள் இருந்தன என்பது தெளிவாகும்.

சிறப்புச் செய்திகள்

(1) திருமணம் முடிந்தவுடன் கோவலனும் கண்ணகியும் தனிக் குடித்தனம் வைக்கப்பட்டனர் (காதை 2). இவ்வழக்கம் இன்றும் நகரத்தாரிடம் இருந்து வருகின்றது. அவர்களும் பூம்புகாரிலிருந்து குடியேறியவராவர்.

(2) திருமண முடிவிலும் (காதை 1), வழிபாட்டு இறுதியிலும் (காதை 12, 17, 24) அரசனை வாழ்த்துதல் குடிகள் வழக்கம். யாத்திரிகர் ஒரு நாட்டு எல்லையுள் புகும்போது அந்த நாட்டு மன்னனை வாழ்த்திக்கொண்டே புகுதல் மரபு (காதை 11). மன்னனிடம் பேசுவோன் தன் பேச்சின் முன்னும் பின்னும் மன்னனை வாழ்த்துதல் மரபு; தன் பேச்சு நீண்டதாயின் பேச்சின் இடையிலும் மன்னனை வாழ்த்துதல் மரபு (காதை 27,28).

(3) மனைவி, கணவனையே சிறப்புடைய கடவுளாக வழிபடுவாள் (காதை 9). அவள் அறவோர்க்கு அளித்தல்