பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


மிகுதிப்பட்ட காலத்தே பண்டைத் தமிழரும் கோந்த் மக்களும் வடஇந்தியாவில் ஒன்றுபட்டிருந்து ஒரே மொழியைப் பேசிவந்த காலத்துக்கு ‘நான்-யான்’ என்பன நம்மை யழைத்துச் செல்கின்றன, என்று கால்டுவெல் கூற்றை நாம் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்,

இங்குக் கூறப்பெற்ற மக்களுள் கோந்த் வகுப்பினர் பழைய தமிழ்ப் பழக்கவழக்கங்களை இன்றும் விட்டிலர் என்பதை அறிதல் வேண்டும் அவர்கள் நிலமகளைத் ‘தரி(ரை)ப் பெண்’ என்று அழைக்கின்றனர்; வழிபடுகின்றனர்.[1] தொல்காப்பியம் சற்றேறக்குறைய 2300 ஆண்டு கட்கு முற்பட்டது. அதைவிட இரண்டு மடங்கு காலம் சென்றிருக்க வேண்டும் என்னும் கூற்றால் சுமார் 7000 ஆண்டுகட்கு முன்னரே தமிழர்-கோந்த்மொழியினர் முதலியோர் ஒன்றாக நடு இந்தியாவில் வாழ்ந்துவந்தனராதல் வேண்டும் என்னும் கால்டுவெல் கூற்று நோக்கத் தக்கது.

“பிராக்ருத மொழிகள் இப்போதுள்ள வடஇந்திய மொழிகளாக மாறுவதற்கு நெடுங்காலமுன்பு ‘கூ’ வகுப்பாரும் தமிழரும் நடு இந்தியாவில் ஒன்றுபட்டவராய் ஒரே மொழி பேசியவராய் (வரலாற்றுக் காலத்துக்கு நெடுங்கால முன்பு) இருந்திருத்தல் வேண்டும். என்னை? கூ மொழியிலும் பன்மையைக் குறிக்கப் பிரதிபெயர்ச் சொற்களில் ‘ம்’ (நாம், நீம், தாம்) வழங்கப்பட்டிருத்தலே போதிய சான்றாதலின் என்க”.[2]

“திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் (கோந்த் பேசுவோர், கூ பேசுவோர் முதலியோர்) நடு இந்தியாவிலும் வங்காளத்தின் அருகிலும் இன்னும் காணப்படல்-இந்தியா


  1. Thurston, Castes and Tribes of Southern India. vol. 3, p. 372.
  2. Caldwell, Comparative Grammar, p. 412.