பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. மணிமேகலை

ஆசிரியர்-காலம்

மணிமேகலையை இயற்றியவர் ‘கூலவாணிகன் சாத்தன்’, என்று மணிமேகலையிலுள்ள பதிகம் கூறுகிறது. ‘தண்டமிழ்ச் சாத்தன்’, ‘மதுரைக் கூலவாணிகன் சாத்தன்’ என்று சிலப்பதிகாரத்திலுள்ள பதிகம் செப்புகின்றது. இப்புலவரது இயற்பெயர் சாத்தன் என்பதும், இவர் கூலவாணிகம் செய்தவர் என்பதும், இவரது ஊர் மதுரை என்பதும் இத்தொடர்களால் அறியப்படும். மதுரையில் கூலவாணிகராய் இருந்த இவர் பைந்தமிழைப் பாங்குறக் கற்றுப் பாவலராயும் விளங்கினர் என்பது இத்தொடர்களால் தெளிவாகின்றது.

இவர் கோவலன் கண்ணகி காலத்தில் வாழ்ந்தவர், மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய அவளது முற் பிறப்பு வரலாற்றை நேரிற் கேட்டவர் என்பன சிலப்பதிகாரத்தால் தெரிகின்றன. மேலும் இவர் செங்குட்டுவள்-இளங்கோவடிகள் காலத்தவர் என்பதும் சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. அவ்வடிகளே சிலப்பதிகாரத்தைச் செய்ய வேண்டுமென்று இச்சாத்தனார் வேண்டினர் என்பது சிலப்பதிகாரப் பதிகத்தால் அறியக் கிடக்கின்றது. மேலும் அடிகள் தம் நூலைச் சாத்தனார் முன்னிலையில் அரங்கேற்றினார் என்பதும், சாத்தனார் இளங்கோவடிகள் முன்னிலையில் மணிமேகலையை அரங்கேற்றினார் என்பதும் இரு நூல்களின் பதிகங்களால் தெளிவாகின்றன. ஆகவே, இச்சாத்த-