பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார் 369

கதைகள்

வடமொழியாளர் தொல்காப்பியர்க்கு முன்னரே தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றனர் என்பது முன்னரே கூறப்பட்டது. அவர்கட்குப் பின்பு சமணரும் பெளத்தரும் தமிழகத்தில் தங்கித் தங்கள் சமயக் கொள்கைகளைப் பரப்பினர். பெருந்தேவனார் என்ற புலவர் பாரதத்தைத் தமிழிற் பாடிப் புகழ் பெற்றார். இராமாயண வரலாற்றுச் செய்திகளுட் சில எட்டுத்தொகை நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் காணப் படுகின்றன. புத்தர் பல பிறவிகளை எடுத்து உயிர்களுக்குப் பல நன்மைகளைச் செய்தனர் என்பதைக் கூறும் புத்த சாதகக் கதைகள் அக்காலத் தமிழகத்தில் பரவியிருந்தன; சுருங்கக் கூறின் வேதநெறி, சமணம், பெளத்தம் பற்றிய கதைகள் தமிழகத்தில் நன்கு பரவியிருந்தன என்னலாம்.

மணிமேகலையில் இத்தகைய பல கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் வசிட்டன் அகத்தியன் பிறப்புப் பற்றிய கதை, உதயணன் கதை, அகலிகை கதை, திக் கடவுள் மனைவியின் கதை, பரசுராமன் அரசர்களை அடக்கிய கதை, ஒரு பிறப்பில் வடநாட்டில் பிறந்த சிலர் வேறு பிறவியில் தென்னாட்டில் பிறந்த கதைகள் என்பவை குறிப்பிடத் தக்கவை. திருமால் மூன்றடியால் மூவுலகங்களையும் அளந்தமை, கண்ணனும் பலராமனும் நப்பின்னையோடு நடனமாடியமை, திருமாலின் மகன் பிரமன் என்பது. சக்கரவாளக் கோட்டம் மயனால் அமைந்தமை என்றாற் போன்ற செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பிறமொழிச் சொற்கள்

பெளத்த நூல்கள் முதலில் பாலிமொழியில் எழுதப்பட்டன; பின்னரே வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. எனவே, பெளத்த சமயம் பற்றிய கருத்துக்களை விளக்கும் இடங்களிலெல்லாம் இவ்விரு மொழிச் சொற்களும் இடம்

த-24