பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

45

தனித்துப் பூக்கொய்யும் நங்கை (தலைவி) ஒருத்தியைக் காண்கிறான். இருவரும் ஒருவரையொருவர் நோக்குகின்றனர். இருவர் விழிகளும் சந்திக்கின்றன, இருவரும் மாறி இதயம் புகுகின்றனர். அவ்வமயம் உள்ளத்துத் தோன்றும் இன்ப உணர்ச்சியே அவர்தம் பிற்காலக் காதல் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றது. பார்வை ஒன்ற, உள்ளம் ஒன்ற, உணர்ச்சி ஒன்ற அவ்விருவரும் ஓருயிர் ஈருடல் ஆகின்றனர். அவ்வின்பப் பூங்காவில் உள்ள நறுமணமுள்ள மலர்களிடையே நங்கை-நம்பி ஆகிய இருவர்தம் காதல் அரும்பும் போதாகி மலர்ந்து மணம் வீசுகின்றது. அம்மட்டோ? தேனும் பிலிற்றுகின்றது. காதல் மணமும் காதல் தேனும் அப்பூங்காவைப் பொன்னுலகமாக்குகின்றது. அன்று முதல் அவர்தம் காதல் வாழ்க்கை களவிலேயே நடந்து வருகின்றது.

தலைவன் சிறுவயதிலிருந்தே தலைவியோடு விளையாடி உற்ற வயது வந்த பின்பு அவள்மீது காதல் கொள்வதும் உண்டு.

நீடித்த களவு வாழ்க்கைக்குத் தோழியும் தோழனும் உதவி செய்யும் பாத்திரங்களாக அமைகின்றனர். தோழி தலைவனது காதலைப் பரிசோதிக்கும் திறம் மிக வியந்து பாராட்டத்தக்கது. தலைவியைத் தலைவன் பெறமுடியாது என்பதற்குப் பல நியாயங்களைத் தோழி கூறுகிறாள். அவளைத் தான் பெறாவிடில் மடல் ஏறுவதாகத் தலைவன் சூள் உரைக்கிறான். இங்ஙனம் பலவாறு முதற்கண் அவனது உள்ளத்தைச் சோதித்த தோழி அவனோடு தலைவியைக் கூட்டுகிறாள். அக்கூட்டம் நடைபெறும் பொழுதே மீண்டும் அவனைச் சோதிக்கக் கருதி, பகலில் வருகின்றவனை இரவில் வரும்படியும், இரவில் வருகின்றவனைப் பகலில் வருமாறும் மாறி மாறி வரச்செய்து, அவனுக்குத் துன்பத்தைத் தருகிறாள்; “தலைவி வீட்டில் அடைக்கப்பட்டாள்; ஆதலின் அவளைப் பெற நள்ளிரவில் வருக” என்பாள். தலைவனும் அவள் சொற்படி நடப்பான். தோழி மீண்டும் நீ வரும் பொழுது