பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

புணர்ச்சி எனப்படும். இங்ஙனம் தோழி கூறுதலை ‘அறத்தொடு நிற்றல்’ என்று இலக்கணம் கூறும்.

மடலேறுதல்: காதலியை அடிக்கடி சந்திக்கத் தோழி வழி செய்யாது விடினும், தலைவியின் பெற்றோர் மணம் மறுப்பினும், தலைவன் மடலேறத் துணிவான். அவன் பனை மடலால் குதிரையைப்போல ஒர் உருவத்தையமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டுவான்; தலைவியின் உருவத்தை ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்துவான்; யாவரும் அறிய மடலூர்ந்து வருவான்; ஊர் மக்கள் உண்மையறிந்து பலவாறு பேசுவர். தலைவியின் பெற்றோர் மணத்திற்கு இசைவர்.

சில சமயங்களில் மடலூர்ந்து செல்லும் தலைவன் ஊர் அவையோரிடம் தன் காதல் நிலையைக் கூறி அவளைச் சேர்ப்பிக்கும்படி வேண்டுவான். இச்செய்திகளைக் கூறும் குறுந்தொகைப் பாடல்கள் பல (14, 17, 32, 173, 182, 276). தலைவியின் வீட்டில் உணவு நேரத்தில் அயலார் வருவர். தலைவன் அவர்களோடு தலைவியின் வீட்டினுள் நுழைந்து விடுவான். (குறுந்தொகை, செ. 118).

உடன்போக்கு: தான் காதல் கொண்ட காதலனுக்குத் தன்னைத் தன் பெற்றோர் தாராரென்பதை அறிந்ததும்; தலைவி தலைவனுடன் ஓடுதல் உண்டு. இஃது ‘உடன் போக்கு’ எனப்படும். அவன் அவளைத் தன் வீடு கொண்டு சென்று மணம் முடித்துக் கொள்ளலும் உண்டு; போகும் பொழுதே தலைவியைச் சேர்ந்தவர் இடைமறித்துக் கொண்டு சென்று தலைவி வீட்டில் திருமணம் நடத்தலுமுண்டு. சரியாகக் கூறுமிடத்து, இவ்வுடன் போக்கிலிருந்தே கற்புத் தொடங்கிவிடுகிறது. இதன் பின்பு நிகழ்வனவெல்லாம் கற்பியற் செயல்கள் எனப்படும். கற்பு என்பது ஒருவன் ஒருத்தியோடு உள்ளம் ஒன்றவாழ்க்கை நடத்தல்.