பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

49

கற்பு வாழ்க்கை

உடன்போக்கு நிகழ்ந்த பின்பு அதுகாறும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பு தலைவன் வீட்டில் நீக்கப் பெறும். கற்பு வாழ்க்கைக்குரிய புதிய சிலம்பு அணியப் பெறும். இவற்றுள் முதல் நிகழ்ச்சி சிலம்பு கழி கோன்பு எனப்படும் (நற்றிணை, 279).

இரவலர்க்குக் கொடுப்பதற்கும் இன்பம் நுகர்வதற்கும் பொருள் இல்லாத ஏழைகட்கு உதவுவதற்குமே கற்பு வாழ்க்கை (இல்வாழ்க்கை) விரும்பப்படுகிறது (குறுந் தொகை, 63).

பிரிவுகள்: தலைவி மிகுந்த கவனத்துடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுவாள்; தலைவனைப் பலபடப் பாராட்டுவாள் (நற்றிணை 1, 237). அவ்வாறே தலைவன் தலைவியின் சமையலைப் பாராட்டுவான். (குறுந்தொகை 127) அவளுடைய பண்புகளைப் பாராட்டி மகிழ்வான். (குறுந் தொகை 101).

கற்பு வாழ்க்கையில் தலைவன் உயர் படிப்புக்காகத் தலைவியை விட்டுப் பிரிவான்; தன் அரசனிடமிருந்து வேற்றரசன்பால் தூது போவதற்காகப் பிரிவான்; தன் அரசனுக்குத் துணையாகப் போக நேரும்பொழுதும் பிரிவான்; பொருள் ஈட்டவும் பிரிவான்; பரத்தைக் காரணமாகவும் பிரிவான்; அங்ஙனம் பிரிய விரும்பும் தலைவன் தலைவியைப் பலவாறு பாராட்டுதல் வழக்கம் (நற் 166).

பொருள் ஈட்டப் பிரிந்த கணவனை நினைந்து மனைவி வருந்துவாள்; ஆயினும், “பொருள்வயிற் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு” (நற். 243) என்று தானே கூறி அமைவாள்; தம்பால் வந்து இரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவருக்கு மகிழ்ச்சியை ஊட்டுவது இல்வாழ்க்கையின் நோக்கங்களில் ஒன்றாகும் (நற். 84).

த-4