பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

புத்தர் காலத்தில் வழங்கத்தொடங்கியது. புத்தர், தருமம், சங்கம் என்னும் மூன்றும் பெளத்த மும்மணிகள் எனப்படும். இவ்வாறே சமணத்திலும் சங்கம் உண்டு. சங்கம் என்னும் சொல்வழக்குப் பெளத்தராலும் சமணராலும் தமிழகத்தில் இடம் பெற்றது என்று கூறுதல் பொருத்தமாகும். அச் சொல் வழக்கே மதுரையில் இருந்த புலவர் கழகத்திற்ரும் பின்னோரால் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதுதல் தகும். சங்ககாலம்

'மதுரையில் சங்கம் இருந்த காலம் எது" என்பது அடுத்து ஆராயவேண்டுவது ஒன்றாகும். பல்லவர் என்னும் புதிய மரபினர் காஞ்சியை அரசிருக்கையாகக் கொண்டு தொண்டை நாட்டை ஏறத்தாழக் கி. பி. 300 இல் ஆளத் தொடங்கினர் என்பது வரலாறு கண்ட உண்மை.18 பல்லவரைப் பற்றிய குறிப்புத் தொல்காப்பியத்திலோ, திருக்குறளிலோ, தொகை நூல்களிலோ. சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் காவியங்களிலோ இல்லை. எனவே, பல்லவர் ஆட்சி காஞ்சியில் தோன்றிய காலம் (கி. பி. 300) சங்கத்தின் இறுதி எல்லையாகக் கொள்வது வரலாற்று ஆராய்ச்சிக்குப் பொருத்தமாகும். அதன் பேரெல்லை ஆய்வுக்குரியது.

மூன்று சங்கங்கள் இருந்தன என்பதற்குக் களவியல் உரையைத் தவிர, வேறு தக்க சான்றுகள் இல்லாவிடினும் மதுரையில் தமிழ்ப்பேரவை இருந்தது என்பது, இதுகாறும் கூறப்பெற்ற பல்வகைச் சான்றுகளால் தெளிவாதல் காணலாம். இச்சங்க நூல்களுள் தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூல் பெற்றுள்ள உயர்வைக் காண, அந்நூல் அத்தகைய முழுமையைப்பெற, அதற்கு முன்பு எத்துணைப் புலவர்கள் இருந்து நூல்கள் இயற்றினர் என்பது எண்ணத் தகுவதாகும். அங்ஙனம் _ எண்ணிப்பார்க்கும் பொழுது. இச்சங்கத்திற்கு முன்பு சில சங்கங்கள் இருந்திருக்கலாம் என்று கொள்வதில் தவறில்லை. களவியலுரையில் கூறப் பெற்றுள்ள ஆண்டுகளோ-புலவர் எண்ணிக்கையோ வேறு படலாம். களவியலுரையில் கூறப்பெற்றவாறு சில சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்தன என்று கொள்வதில் குற்றம் ஒன்றும் இல்லை. ஒரே சங்கமாகக் கொள்ளின், அதன் கீழ் எல்லை ஏறத்தாழக் கி.பி. 300, மேல் எல்லை கூறற்கியலாத பழைமையுடையது என்று கொள்வதே பொருத்தமாகும்.

18. Dr. D. Sircar, Successors of the Satavahanas,

- pp. 164–166. `