பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

வயிரம் முதலிய விலை உயர்ந்த மணிகள் ரோமப் பெரு நாட்டுக்கு அனுப்பப்பட்டன.

இப்பல பொருள்களையும் பெற்றுக்கொண்ட ரோமர்கள் இவற்றுக்குப் பதிலாகப் பொன் வெள்ளி நாணயங்களையும், உயர்ந்த மதுவகைகளையும், பவழம், ஈயம், தகரம், எந்திரப் பொறிகள் முதலியவற்றையும் ஏற்றுமதி செய்தனர்.[1] பிளைநி (கி. பி. 24-79) என்ற மேனாட்டு யாத்திரிகர், தமிழகத்திலிருந்து ரோம் நாட்டுக்கு ஏற்றுமதியான முத்துகள், மெல்லிய ஆடைகள், இன்பப் பொருள்கள் இவற்றுக்காக ரோம் நாட்டுச் செல்வம் மிகுதியாகச் செலவழிக்கப்பட்டது என்று வருந்திக் கூறியுள்ளனர்.[2] “செங்கடலிலுள்ள ஏசிரிஸ் என்னும் இடத்திலிருந்து (பருவக்காற்றுச் செம்மையாக வீசினால்) நாற்பது நாட்களில் சேரநாட்டு முசிறியைக் கப்பல்கள் அடையக்கூடும். முசிறி கடற் கொள்ளைக்காரரால் தாக்கப்படுவதால், பிரயாணிகள் பக்கரே (வைக்கரை)யில் இறங்க விரும்புகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.[3]

கி. பி 60 இல் பெரிப்ளுஸ் என்னும் நூலை எழுதிய ஆசிரியர் இந்தியத் துறைமுகங்களை நேரில் கண்டு பல செய்திகளைக் குறித்துள்ளார். சேரநாட்டில் தொண்டி, முசிறி, குமரி என்ற துறைகளையும், பாண்டிய நாட்டில் கொற்கைத் துறைமுகத்தையும், சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினத்தையும் குறித்துள்ளார்; கொற்கையில் கொடிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவரே முத்துக்குளித்து வந்தனர் என்று கூறியுள்ளார்; உறையூர் முத்து வாணிகத்திற்குப் பெயர்போனது என்றும் குறித்துள்ளார்; கிழக்குக்


  1. 8. History of Ceylon, vol. 1, Part, I. p. 213.
  2. 9. Ibid. pp. 395–309.
  3. 10. Dr. S. A. G. Hussain, The History of the Pandya Country, p. 18.