பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

85

பல சிறிய தீவுகள் அமைந்துள்ளன. ஏறத்தாழக் கி. மு. ஆறு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் விசயன் என்பவன் வட இந்தியாவிலிருந்து வந்து இலங்கை அரசனாய் முடி சூடிக் கொண்டான்.

இந்திய இலக்கியங்களுள் இலங்கையைப் பற்றிக் குறிக்கும் முதல் நூல் கெளடில்யன் (சாணக்கியன்) எழுதிய பொருள்நூலேயாகும். அதே காலத்தில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞனும் இலங்கையைப் பற்றி எழுதியுள்ளான். கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகன் தன் மகனான மகேந்திரனையும் தன் மகளான சங்கமித்திரையையும் பெளத்த சமயத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினான்.

அசோக மன்னன் காலத்தில் இலங்கை அரசனாய் இருந்தவன் தேவனாம்பிரியதிஸ்ஸன் என்பவன். அவனுக்குப் பிறகு அவன் பின்னவரான உத்தியன், மகாசிவன், சூரதிஸ்ஸன் ஆகிய மூவரும் (ஒவ்வொருவரும் ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் வீதம்) முப்பது ஆண்டுகள் அரசாண்டனர். சூரதிஸ்ஸன் ஆட்சிக் காலத்தில் கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் சேனன், குத்தகன் என்ற தமிழர் (தமிழகக் குதிரை வாணிகர்) இருவர் இலங்கையைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினர். அவர்கள் கதம்ப ஆற்றின் போக்கை இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்திற்கு அண்மையில் திருப்பி விட்டனர்.

தேவனாம்பிரியதிஸ்ஸனுடைய தம்பியான அசேலன் என்பவன் தமிழரசர் இருவரையும் முறியடித்துப் பத்து ஆண்டுகள் நாட்டை ஆண்டான். அக்காலத்தில் (கி. மு. 2 ஆம் நூற்றாண்டில்) ஏழாரன் என்ற தமிழன் இலங்கையைக் கைப்பற்றி ஏறத்தாழ நாற்பத்து நான்கு ஆண்டுகள் அரசாண்டான் [1] பின்னர் அவன் துட்டகாமணி என்ற இலங்கையரசனாற் போரிற் கொல்லப்பட்டான். ஏாழாரன்


  1. 44. History of Ceylon, Vol. 1, part i. p. 144