பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

தெரிகின்றது. அப்பரந்துபட்ட காலத்தில் பாண்டியும் தமிழ்ச் சங்கத்தை வைத்துத் தமிழ் வளர்த்து வந்தனர் என்பது சங்க நூல்களால்[1] தெளிவாகத் தெரிகின்றது. ஆதலால் இக்காலம் சங்ககாலம் என்று ஆராய்ச்சியாளரால் கூறப்படுகின்றது.

ஏறத்தாழக் கி. பி. 300 முதல் கி. பி. 875 வரையில் தமிழகத்தில் பல்லவரும் பாண்டியரும் சிறப்புற்றிருந்தனர். அக்காலத்தில் சைவமும் வைணவமும் சமணத்தையும் பௌத்தத்தையும் எதிர்த்துப் போரிட்டன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் முறையே சைவத்தையும் வைணவத்தையும் தம் திருப்பாடல்களால் வளர்த்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை இப்பல்லவர் காலத்தில் தோன்றியவை.

பல்லவர்க்குப் பின்பு பேரரசராய் விளக்கமுற்ற பிற்காலச் சோழர்கள் சைவ வைணவ சமயங்களை நன்கு வளர்த்ததோடு சமணர்க்கும் பௌத்தர்க்கும் வேண்டிய அளவு உதவி செய்தனர். இச்சோழர் ஏறத்தாழக் கி. பி. 875 முதல் 1300 வரையில் நாடாண்டனர். இவர்கள் காலத்தில் சமய வளர்ச்சி மிகுதியாகக் கவனிக்கப்பட்டது. எனவே, பல்லவர் சோழர் காலங்களைச் சமய வளர்ச்சிக் காலம் அல்லது இடைக்காலம் என்று கூறலாம். இக்காலத்தில் சிந்தாமணி, பெரிய புராணம், கம்ப ராமாயணம் போன்ற பெரு நூல்கள் தோன்றின; இவற்றோடு அரசியல் தொடர்புடைய கலிங்கத்துப்பரணி, மூவருலா போன்ற சிறு நூல்களும் தோன்றின யாப்பருங்கலம், வீரசோழியம், தண்டியலங்காரம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களும் தோன்றின.

கி. பி. 1300க்குப் பிறகு தமிழகம் விசயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது; பின்பு நாயக்கர் ஆட்சிக்கும் கருநாடக நவாபுகள் ஆட்சிக்கும் உட்பட்டது; இறுதியில் ஆங்கிலேயர்


  1. இந்நூலில் உள்ள ‘மதுரையில் தமிழ்ச் சங்கம்’ என்னும் பகுதியைக் காண்க.