பக்கம்:தமிழ் அங்காடி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 தமிழ் அங்காடி


9. வீடணன் அடைக்கலம்

சீதையை இராமனிடம் விட்டுவிட வேண்டும் என வற்புறுத்தித் தம்பி வீடணன் கூறியதைக் கேட்ட இராவணன், செவ்வரக்கை ஊட்டினாற் போன்ற சிவந்த கண்ணுடன் வெகுண்டு கூறலானான்:

நீயுமே நிகர்

தன் தந்தையை நரசிங்கன் கொன்றதை நேரில் கண்டும் தந்தைப் பற்று இன்றி மகிழ்ச்சி கொண்ட பிரகலாதனும், நம் பகைவனாகிய இராமனிடம் அன்பு செய்கின்ற நீயும் ஒரு நிகர் ஆவீர்:

"ஆயவன் வளர்த்ததன் தந்தை ஆகத்தை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும்நம் பகைவனுக்கு இனிய நண்புசெய்
நீயுமே நிகர்பிறர் நிகர்க்க நேர்வரோ" (3)

மாயவன் = திருமாலாகிய நரசிங்கன். மைந்தன் பிரகலாதன். பகைவன் = (இங்கே) இராமன்.

தன்னைப் பெற்று வளர்த்த தந்தை என்றும் பாராது அவனைக் கொல்லச் செய்து மகிழ்ந்தவன் பிரகலாதன் எனப் பிரகலாதனை இழிவு செய்கிறான். மாயம் உடையவன் கொன்றான் என்னும் பொருளில் மாயவன் என்றான். தம்பியாகிய வீடணனையும் உள்ளடக்கி 'நம்' பகைவன் என்றான். நட்பு எளிய நட்பு அன்றாம் - இராமனுக்கு இனிமை - நன்மை செய்யும் நட்பாம் - அதனால் 'இனிய நண்பு’ என்றான்.

தந்தைக்குத் தீங்கு செய்தவனுக்கும், தமையனுக்குத் தீங்கு தேடும் வீடணனுக்கும் பிறர் யாரும் நிகராகமாட்டார்களாம். பிரகலாதனும் வீடணனுமே ஒருவர்க்கு ஒருவர் நிகராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/102&oldid=1203379" இலிருந்து மீள்விக்கப்பட்டது