பக்கம்:தமிழ் அங்காடி.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 103


ஓர் இனிய பொருள் கூறலாமே! மக்கள் வழக்காற்றில், உடன் பிறந்தவர்களை 'என் பிறப்பு' என்று கூறும் மரபு உண்டு. எனவே, பிறப்பு மாற்றினை என்பதற்கு, நீயும் யானும் உடன் பிறப்பு என்பதையே மாற்றி விட்டாயே - அதாவது, நான் தமையன் நீ தம்பி என்னும் பிறப்பு முறையையே மாற்றி விட்டாயே - என்பதுதான் அந்தப் புதிய பொருள்.

இங்கே, இராமன், குகனை ஐந்தாவது உடன் பிறப்பாகவும் சுக்கிரீவனை ஆறாவது பிறப்பாகவும் வீடணனை ஏழாவது பிறப்பாாகவும் கொண்டதாகக் கூறும் வரலாற்றுப் பகுதி நினைவு கொள்ளத்தக்கது. எதிர்காலத்தில் நடக்கப்போகும் இந்தச் செயலைக் குறிப்பாய் உள்ளடக்கிக் கம்பர், 'பிறப்பு மாற்றினை’ என்று இராவணன் கூறியதாகப் பாடியுள்ள நயம் மிகவும் சுவைக்கத் தக்கது இராவணனின் தம்பி இராமனின் தம்பியாகப் போகிறான்.

அடுத்து, 'நஞ்சினை உடன் கொண்டு வாழ்தல் நன்மையோ' என்னும் பகுதி எண்ணத்தக்கது. 'கோட்டானை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பதா?’ என்னும் பழமொழியின் உட்கருத்தோடு ஒத்ததுபோல் தோன்றுகிறது இது. நஞ்சு - விடம். இதனைச் சினையாகு பெயராகக் கொண்டு நஞ்சையுடைய பாம்பு எனவும் பொருள் கொள்ளலாம். ஒத்து வராதவருடன் வாழ்தல், ஒரு குடிலுக்குள் பாம்போடு சேர்ந்து வாழ்வது போன்றதாகும் என்னும் கருத்துடைய -

"உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று" (890)

என்னும் குறள் ஈண்டு ஒத்து நோக்கற்பாலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/105&oldid=1203470" இலிருந்து மீள்விக்கப்பட்டது