பக்கம்:தமிழ் அங்காடி.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 105


உயிரினும் புகழ்ச்செயலிலேயே விருப்பம் எனக்கு உண்டு - (இலங்கையிலேயே இருந்தேனே யாயின் எனக்குப் பழியில் பங்கு உண்டாகும்) என்பதை, “நன்புகழ் அலால் வாழ்வு வேண்டலன்’ என்னும் தொடரால் அறிவிக்கின்றான்.

மாட்டைக் கொன்று செருப்புத் தானம் செய்வதுபோல், கடைத் தேங்காயைத் திருடி வழிப் பிள்ளையார்க்கு உடைப்பதுபோல், சிலர் தீய வழிகளில் - குறுக்கு வழிகளில் புகழ் சேர்க்க முயல்வர். அத்தகைய வழியில் இல்லாமல், நல்ல வழியில் நற்செயல் செய்து பெறும் புகழே உண்மைப் புகழாகும் என்பதை 'நன் புகழ்’ என்பது அறிவிக்கின்றது. இத்தகைய புகழையே வள்ளுவர் 'ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்’ (233) எனவும், 'நீலவரை நீள் புகழ்’ (234) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயரியோர், பழியால் வருவது எனில் உலகமே கிடைப்பினும் கொள்ளார் - புகழ் எனில் உயிரையும் கொடுப்பர் என்னும் கருத்துடைய -

"புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகு உடன்பெறினும் கொள்ளலர்" (182)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதி ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.

அறிமுகம்

இராமனைக் காணலாம் என அமைச்சர்கள் கூற, வீடணன் மகிழ்ச்சி அடைந்தான். அப்போது இராமன் கடற்கரையை நோக்கி வந்தான். வீடணனும் சிறிது நெருங்கலானான். அதைக் கண்ட வானரர், அரக்கர் வந்து புகத் தொடங்கி விட்டனர். இராவணனுக்கு (பல்லா மாட்டியது போல்) பத்துத் தலைகள், (அகப்பை செருகியது போல்) இருபது கைகள் உண்டு என்பார்களே - இதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/107&oldid=1203473" இலிருந்து மீள்விக்கப்பட்டது