பக்கம்:தமிழ் அங்காடி.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120  தமிழ் அங்காடி



அடைக்கலம் என்று தன்னை வந்து கட்டிக்கொண்ட மார்க்கண்டேயனைச் சிவன் யமனிடமிருந்து காக்க வில்லையா?

சீதையின் அழுகைக்குரல் கேட்டு இராவணனை எதிர்த்துப் போரிட்டுச் சடாயு மடியவில்லையா?

எனவே, அடைக்கலம் வேண்டி வந்தவனை விடாமல் ஏற்பதே முறை, நீங்கள் கூடாது என்று முன்பு கருதிய எண்ணத்தை மாற்றிக் கொள்வதே நல்லது என்று கூறிச் சுக்கிரீவனை நோக்கி விடணனை அழைத்து வரும்படி இராமன் ஏவினான்.

இராமனது கட்டளைப்படி சுக்கிரீவன் வீடணனை நோக்கிச் சென்றான். வீடணனும் சுக்கிரீவனை நோக்கி வந்தான்.

பலகாலம் பழகினும் அற்பர்கள் ஒன்ற மாட்டார்கள். துரயோர் நாள் கணக்கிலோ மணிக்கணக்கிலோ அல்ல-முதல் முறையாகக் கண்ட அப்போதே ஆழ்ந்த அன்பும் நட்பும் உடையவ ராவர். இதன்படி, ஒரே காலத்தில் திங்களும் ஞாயிறும் தோன்றினாற்போல வீடணனும் சுக்கிரீவனும் தழுவிக் கொண்டனர்.

“சொல்லரும் கால மெல்லாம்
பழகினும் தூய ரல்லார்
புல்லலர், உள்ளம் தூயார்
பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே
ஒல்லை வந்துஉணர்வும் ஒன்ற
இருவரும் ஒருநாள் உற்ற
எல்லியும் பகலும் போலத்
தழுவினர் எழுவின் தோளார்” (121)

எல்லி=இரவு - (திங்கள்). பகல் = ஞாயிறு. எழு=தூண். எழுவின் தோளார் = தூண் போன்ற வலிமை பொருந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/122&oldid=1203500" இலிருந்து மீள்விக்கப்பட்டது