பக்கம்:தமிழ் அங்காடி.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  121


தோள்களை உடைய சுக்கிரீவனும் வீடணனும் ஆகியோர். 'எழுவின்’ என்பதில் உள்ள ஐந்தாம் வேற்றுமை 'இன்’ உருபு ஒப்புப் பொருளில் வந்துள்ளது. நட்பின் திண்மை பற்றி வெற்றி வேற்கை என்னும் நூலில் உள்ள-

"நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாதே; (33)
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருகிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே” (34)

என்னும் பாடலும், திருக்குறளில் உள்ள

"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு” (782)

என்னும் குறட்பாவும், நாலடியாரில் உள்ள

“செல்வழிக் கண் ஒருநாள் காணினும் சான்றோர்

தொல்வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்தியாப்பர்"
(154)

என்னும் பாடலும் சண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

வீடணன் ஓரளவு கருநிறமும் சுக்கிரீவன் பொன்னிறமும் உடையவராதலின், எல்லியும் பகலும் போலத் தழுவினர் எனப்பட்டனர். ஞாயிறை நோக்க நடுவிலே இருள் உடைய திங்கள் ஒளி குன்றிய தாதலின், திங்கள் வீடணனுக்கு உவமையாக்கப்பட்டது.

'ஒரு நாள் உற்ற எல்லியும் பகலும் போல' என்பதற்கு, 'ஒரே நாளில் பொருந்திய இரவும் பகலும் போல’ என்பதான ஒரு பொருள் கூறப்படுகிறது. எனது பொருள்: ஒரே காலத்தில் - ஒரே நேரத்தில் திங்களும் ஞாயிறும் தெரிவது போல - என்பது. நாள் என்பதற்குக் காலம் என்னும் பொருள் உண்மையை, 'அந்தக் காலத்தில்' என்பதற்குப் பதிலாக அந்த நாளில் என்னும் மக்களின் வழக்காற்றால் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/123&oldid=1203501" இலிருந்து மீள்விக்கப்பட்டது