பக்கம்:தமிழ் அங்காடி.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  133



அழிந்துபோன அரக்கரின் எண்ணிக்கை மிகுதி என்பதை அறிவிக்கப் பரவை நுண்மணலினும் மிக்கவர் என்றார். சிறிய கடல் அன்று - பரந்துபட்ட பெரிய கடல் என்னும் பொருளில் பரவை என்றார். மண்ணுலகில் மண்பகுதியினும் பெரும் பங்கு கடலன்றோ? பெரிய மணலினும் நுண்ணிய மணலே எண்ணிக்கையில் மிகுதியாகும் என்னும் பொருளில் நுண்மணல் என்றார். இரணியன், திருமால் என்னும் பெயரைக் கூற உள்ளம் ஒவ்வாமையால் ‘அவன்’ என்றானாம்.

அரவின்(பாம்பின்) நாமத்தை எலி இருந்து ஓதுதல் என்னும் உவமையில், அரவின் நாமம் என்பது 'நமோ நாராயணாய' என்னும் திருமாலைக் குறிக்கும் பெயர். எலி என்பது பிரகலாதனுக்கு ஒப்புமை. பாம்பு எலிகளைக் கொல்வது போல் திருமால் அரக்கர்களைக் கொன்றவர். அதனால் திருமாலின் பெயரைக் கூறலாகாது என இரணியன் பணிக்கிறான். துன்மதி = கெட்ட புத்தி உடையவனே. இரணியன் பார்வைக்குப் பிரகலாதன் துன்மதியாகக் காணப்படுகிறான்.

பயிற்றவோ பயந்தது

மேலும் கூறுவான்: பிரகலாதா! பதினான்கு உலகையும் வயிற்றுக்குள் அடக்கிய மிக்க ஆற்றலுடைய என் தம்பியைப் பன்றி உருவெடுத்துக் கோரப் பற்களால் கொன்றவனுடைய பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கவா உன்னைப் பெற்றேன்?:

"வயிற்றினுள் உலகு ஏழினோ டெழையும் வைக்கும்
அயிர்ப்பில் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்றாகி
எயிற்றினால் எறிந்து இன்னுயிர் உண்டவன் நாமம்
பயிற்றவோ நினைப் பயந்தது நானெனப் பகர்ந்தான்"
(51)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/135&oldid=1204190" இலிருந்து மீள்விக்கப்பட்டது