பக்கம்:தமிழ் அங்காடி.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158  தமிழ் அங்காடி


தனித்தும் இயங்கும் தகைசால் பெருமிதம்,
இனித்திடு மொழிபல ஈன்றும் கன்னிமை,
இலக்கிய இலக்கண இயல், இசை, கூத்தெனும்
துலக்குறு மூவகை துன்னிய பெருவளம்,
கணக்கில் கலைவளம், கலைக்கழ கங்கள்,
மணக்கும் கூடலாம் மதுரையின் மாப்புகழ்
ஆய்வுமன் றங்கள், அரும்பெரும் படைப்புகள்,
தாய்மொழி தனக்காத் தம்முயி ருந்தரும்
வாய்மைப் புலவரும் வள்ளலும் மன்னரும்
சேய்களாய் மன்னிய செல்வச் செழுமை,
இன்னன பிறவும் இன்றமிழ்த் தாய்க்கு
மன்னிய தலைமை மகுடமாய்த் திகழுமால்!
தலைவி வினவல் நல்லது,
இன்னவை யாவும் இன்றமிழ்த் தாய்க்கு
மன்னிய மகுட மாமா றுணர்த்துமின்!
தலைவன் கூறல் சரி, கேண்மதி!


'
'[தமிழின் தொன்மை]


முட்டையோ புள்ளோ முதல தென்று
திட்டமா யுரைக்கத் தெரியா தாயினும்
மன்னி முதன்முதல் மக்கள் பேசிய
கன்னி மொழிநங் கன்னித் தமிழே!
மன்பதைத் தோற்றம் மாதமிழ் நிலத்திலே
என்பதை யுரைக்கின் இறும்பூ தென்ன!
நன்று சான்றும் நவிலுவன் மாதோ!
அமெரிக் காவிலோ ஐரோப் பாவிலோ
ஆஃபிரிக் காவிலோ ஆத்திரே லியாவிலோ
மக்கள் நெருக்கம் மண்டி யிருப்பது?
தக்க ஆசியத் தரையிலே யன்றோ?
எப்பொருள் மிகமிக எவ்வழி யிருக்குமோ
அப்பொருள் தோற்றம் அவணே என்றான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/160&oldid=1204241" இலிருந்து மீள்விக்கப்பட்டது