பக்கம்:தமிழ் அங்காடி.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  169


வந்து, ஒரு கையால் அவனைத் தன் உடம்போடு அணைத்துக்கொண்டு இன்னொரு கையால் அவனது தலையை அன்பு ததும்பத் தடவிக் கொடுத்ததைத் தவிரக் கிழவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாட்டனுடைய கண்களிலிருந்து அரும்பிய நீர்த்துளிகள் பேரனது தலையின்மேல் தடவிக் கொண்டிருந்த அவனுடைய கைமேலேயே சொட்டிவிட்டதால் பேரனுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது.

இந்தக் காட்சி என்னை மிகவும் உருக்கிவிட்டது. பேரனுக்குச் சோற்றுக்கே வழியில்லை. ஆனால் அவன் சைக்கிள் விட்டுப் பார்க்க வேண்டுமென்று பாட்டனது உள்மனம் விரும்புகிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என நான் உய்த்துணர்ந்தேன்.

கிழவனது பற்றில் இயற்கையின் மறைவு பொதிந்து கிடப்பதையும் நான் உணரத் தவறவில்லை. இருவருடைய வயதையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், பேரன் பெரியவனாகி நம்மைக் காப்பாற்றும் வயது வரும்வரைக்கும் நாம் இருக்க மாட்டோம் என்பது கிழவனுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் கிழவன் அந்தப் பையனைக் கட்டிக் கொண்டு அழுது தொலைக்கிறான். இந்தப் பற்று இல்லை யென்றால் அந்தக் குழந்தையின் நிலை என்ன?

பையனோடு வந்த கிழவன் பிச்சைக்காரனாகத்தான் இருக்கவேண்டும். தோற்றத்தில் ஏழ்மையும் எளிமையும் காணப்பட்டாலும், பரம்பரை ஆண்டியாக இல்லாமல் பஞ்சத்தில் ஆண்டியாக அவன் இருக்கவேண்டும். வாழ்ந்து கெட்டவன் என்பதற்குரிய சாயல் அவன் முகக்குறியில் தென்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/171&oldid=1204273" இலிருந்து மீள்விக்கப்பட்டது