பக்கம்:தமிழ் அங்காடி.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  171


தானாகப் பரிந்து உதவிய அவரது கொடைப் பண்பை யார்தான் பாராட்டாமல் இருக்கமுடியும்? ஆனால் உதவி பெற்ற கிழவன் ஒருவகை நன்றியுணர்ச்சியும் காட்டாமல் சென்றது எனக்கு வியப்பாக - இல்லையில்லை - எரிச்சலாக இருந்தது. கேட்ட பிறகு கொடுத்திருந்தால் ஒருவேளை நன்றி சொல்லியிருப்பானோ என்னவோ! கேட்டபிறகுங்கூட கெடுபிடி காட்டிக் கொடுத்தால்தான் கொடையின் அருமை வாங்குபவர்க்குப் புரியுமோ? இல்லாவிட்டால் 'சட்டை' கெட்டுவிடும் போலும்!

இந்தக் காட்சி ஒருநாள் மட்டும் நடக்கவில்லை. அடுத்தடுத்துப் பல நாட்கள் இதுபோல் நடக்கக் கண்டேன். கிழவனும் பையனும் வருவதும் கமலநாதன் ஏதேனும் கொடுத்தனுப்புவதும் வழக்கமாகிவிட்டன. சில நாட்களில் கிழவன் மட்டும் வருவான். சில நாட்களில் பையன் மட்டும் வருவான். என்றைக்கும் கமலநாதனது கொடைமட்டும் வற்றவேயில்லை. இதன் மூலம் அவர் என் உள்ளத்தில் உயர்ந்த இடம் பெற்றுவிட்டார்.

சில சமயம் வான்முகில் பெய்யாது பொய்த்து விடுவதும் இயற்கை. அதுபோலவே ஒருநாள் நிகழ்ச்சி இருந்தது. கமலநாதன் கிழவனையும் பையனையும் நோக்கி, ‘இனி இந்தப் பக்கமே வரக்கூடாது’ என்று கடிந்து பேசி வெறுங்கையோடு அனுப்பிவிட்டார். மற்றொரு நாளும் ஏழைகள் இருவரும் வந்ததுபோலவே வறிதே திரும்பி விட்டனர்.

பின்னே என்ன? கறக்கிற மாடு என்று தெரிந்தால் உலகம் (வாளா சும்மா) விடாது; ஒட்டப் பீச்சிக்கொண்டு தான் இருக்கும். ஒருவருக்கே தொடர்ந்து தொல்லை கொடுத்தால் யார்தான் செய்யமுடியும்? கமலநாதனது கை வற்றிவிட்டதை யறிந்ததும் கிழவனாகட்டும், பையனாகட்டும் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/173&oldid=1204279" இலிருந்து மீள்விக்கப்பட்டது