பக்கம்:தமிழ் அங்காடி.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  173


வழக்கம். அந்தவாய்ப்பை நழுவவிடாது பயன்படுத்திக் கொள்ளும் கிழவன் கெட்டிக்காரன் தான். வீட்டுப்பக்கம் வராதே என்று முந்தி சொன்னதும், கிழவன் வீட்டுப் பக்கமே போகாது நின்று விட்டான். இனி இந்தக் கடைப் பக்கமே வராதே’ என்ற வாக்கியம் கமலநாதனது வாயிலிருந்து வரும் வரைக்கும் கிழவன் விடமாட்டான் போலும்!

என்னுடைய கணிப்பு பலிக்க வெகுநாள் ஆகவில்லை. அண்மையிலேயே ஒருநாள், நான் வழக்கம்போல வெற்றிலை சீவல் வாங்கச் சென்றிருந்தபோது ‘இனிமேல் இதுபோல் இங்கேயெல்லாம் வரக்கூடாது’ என்று கமலநாதன் கிழவனைக கண்டித்தாற்போல ஏதோதோ வார்த்தைகள் என் காதில் விழுந்தன. அந்தோ! அதன்பிறகு கிழவனையும் பையனையும் அந்தப் பக்கமே காணவில்லை.

நான் கிழவனை மறந்தாலும் அவன் மறக்கவிடமாட்டான் போல் இருக்கிறது. ஒருநாள் வழக்கம்போல் வேலை முடிந்து நான் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் ஓர் அலுவலக வாசற்படியில் அதே கிழவனும் பையனும் நின்று கொண்டிருக்கக் கண்டேன். கமலநாதன் கைவிரித்து விட்டதால், பழுத்த மரம் நாடிப் பல பக்கங்களிலும் செல்லும் பறவைகள்போல, இருவரும் இந்தப் பக்கம் யாரிடமோ உதவி கேட்க வந்துவிட்டார்கள் போலும் என்று நான் எண்ணினேன். அப்போது அதே கமலநாதன் வந்து அவர்களுக்குக் காசு கொடுத்ததைக் கண்ட என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. கண்ட கண்ட இடங்களில் கேட்டாலும் காசு கொடுக்கும் கமலநாதனது ‘குணச்சித்திரம்' எனக்குப் பெரிய புதிராக இருந்தது. வாங்கிச்சுவை கண்ட கை வாங்கிக் கொண்டே யிருப்பதைப் போல் கொடுத்துச்சுவை கண்ட கையும் கொடுத்துக் கொண்டேயிருக்குமோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/175&oldid=1204282" இலிருந்து மீள்விக்கப்பட்டது