பக்கம்:தமிழ் அங்காடி.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174  தமிழ் அங்காடி



கமலநாதன் வேலை பார்க்கும் அலுவலகம் அதுதான் என்பது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. கிழவனும் பையனும் எப்படியோ தெரிந்து கொண்டு அங்கேயும் படையெடுத்துவிட்டார்களே!

கமலநாதனுக்கும் கிழவனுக்கும் இடையே மறைந்து கிடக்கும் மனோதத்துவத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 'இனிமேல் இங்கே வராதே’ என்று கமலநாதன் கடிந்து பேசுகிறார். அதுபோலவே கிழவன் அங்கே போவதேயில்லை. ஆனால் புது இடத்தில் சந்தித்துக் கேட்கிறான்; அவரும் காசு கொடுக்கிறார். இது எனக்கு மிகவும் புதிராயிருந்தது. ஒருவரையே தொடர்ந்து ஒரே இடத்தில் கண்டு கேட்காமல் மாறி மாறிப் பல இடங்களில் கண்டு கேட்க நேர்ந்தால், கேட்கும் மனம் கூசாதுபோலும்! அதுபோலவே, ஒருவருக்கே தொடர்ந்து ஒரே இடத்தில் கொடுத்துக்கொண்டிராமல் மாறி மாறிப் பலவிடங்களில் கண்டு கொடுக்க நேர்ந்தால், கொடுக்கும் மனமும் சலிக்காது போலும் இப்படியாக என்னென்னவோ கற்பனை செய்து என் மூளையைக் கசக்கிக் கொண்டே வீடுபோய்ச் சேர்ந்தேன்.

கமலநாதனது அலுவலக வழியாக நான் போம்போது அங்கே பல தடவை கிழவனையும் பையனையும் கண்டிருக்கிறேன். ஒருநாள் அவ்வழியாக வந்துகொண்டிருந்த போது, அந்த அலுவலக எதிரில், கிழவனோடு வந்த பையன்மேல் ஒருவன் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டான். 'தாத்தா’ என்று அலறிக்கொண்டு பையன் கீழே விழுந்தான். ‘கண்ணே மணியா’ என்று கதறியவாறு கிழவன் பேரனைத் தூக்கிக்கொண்டான். நானும் கிழவனுக்குத் துணை புரிந்தேன். அலுவலகக் குறட்டில் பையனைப் படுக்கவைத்தோம். நல்ல வேளையாக அவனுக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லை. ஏதேதோ பணிக்கை செய்ததன் பயனாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/176&oldid=1204285" இலிருந்து மீள்விக்கப்பட்டது