பக்கம்:தமிழ் அங்காடி.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180  தமிழ் அங்காடி


சாப்பிட்டு வந்தோம். பிறகு எங்களுக்குச் சமைக்க முடியாது என்று கைகழுவி விட்டாள்.”

“அட பாவமே உன் மகன் கமலநாதன் இதில் ஒன்றும் தலையிடுவதில்லையா?”

“அவன் ஏதாவது கண்டித்தால், கிணற்றில் விழுந்து விடுவேன் என்று மிரட்டுவாள். ஒருநாள் வேதனை தாளாமல் அவளை ஓர் அடி அடித்துவிட்டான். உடனே கிணற்றில் விழுந்து விடுகிறேன் என்று ஒடிக் கிணற்றுக் கைப்பிடிச் சுவரின்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டாள். என்னையும் மணியனையும் வெளியில் அனுப்பினால்தான் கிணற்றில் விழாதிருக்க முடியும் என்று தீர்த்துக்கட்டிச் சொல்லிவிட்டாள்."

“அப்புறம் என்னவாயிற்று?"

"என் மகன் சிறிது அஞ்சுகிற இயல்பு உடையவன். எனவே, நானாக மணியனை அழைத்துக் கொண்டு மகனிடமும் சொல்லாமல் வெளிக்கிளம்பி விட்டேன்.”

“இரண்டு பேரும் இப்போது எங்கே தங்கியிருக்கிறீர்கள்?"

என் மகள் வீட்டில் தங்கியுள்ளோம். மகள் வீடு போதுமான வசதி உடையதன்று. ஏதோ உணவு கொடுத்து விடுவார்கள். கைச் செலவுக்காக என் மகனிடம் பேரனுடன் வந்து காசு பெற்று வருகிறேன். வீட்டிற்கு வந்து காசு வாங்குவதைப் பொறுக்காத பர்வதம் அதைத் தடுத்துவிட்டாள். பின்பு கடைப் பக்கம் சென்று காசு வாங்குவதை எப்படியோ அறிந்து கொண்ட பர்வதம் அதையும் தடுத்துவிட்டாள். அதனால்தான் அலுவலகத்திற்குச் சென்று மகனிடம் காசு பெறுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/182&oldid=1204300" இலிருந்து மீள்விக்கப்பட்டது