பக்கம்:தமிழ் அங்காடி.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  191


வணங்குவார். அடிகளாரின் சிறப்பு குறித்துத் திரு.வி.க. தெரிவித்துள்ள சில கருத்துகள் வருமாறு:-

“...முருகன் சேவடி வருடி உருகும் ஈர நெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நல் நாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்கும் செவியும், பொன்னொளிரும் மணி மார்பும், கருமைக் கதிர் விரிக்கும் திருமேனியும் ‘சண்முகா - சண்முகா' என்று கூறி நீறு அளிக்கும் நீண்ட கையும் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஒவியமெனப் படிந்து நிற்கிறது...

ஞானியார் அடிகளார் மாணாக்கருக்குப் பாடம் சொல்லும்போதும் ஊர் ஊராய்ச் சென்று சொற்பொழிவு நிகழ்த்தும்போதும், தொல்காப்பியனாராகவும், நற்கீரராகவும், திருவள்ளுவராகவும், இளங்கோ அடிகளாகவும் கச்சியப்பராகவும், கம்பராகவும், சேக்கிழாராகவும், வியாசராகவும், நீலகண்டராகவும், சிவஞான முனிவராகவும் முறைமுறையே விளங்கி விளங்கி இலக்கிய - இலக்கண - சாத்திர நுட்பங்களை வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டுப் புலவரானவர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன்றோ!...

அடிகளார் கருமை பூத்த ஒரு பொறுமை மலை. அம்மலையின் உச்சியில் (மூளையில்) கலைமேகங்கள் பொழிந்த அருவி மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பல திறச் சுவைநுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலை கொழித்துக் கொழுத்து ஒடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/193&oldid=1204332" இலிருந்து மீள்விக்கப்பட்டது