பக்கம்:தமிழ் அங்காடி.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  201


அந்தோ! வீண் வேலை செய்து இடர்ப்படுகிறாரே என்று இரக்கப்பட்டேன். மற்றொரு மொழியியலார் வெளக்கு என்பதிலிருந்துதான் விளக்கு வந்தது என்றார் - அங்ஙனமெனில், வெறகு என்பதிலிருந்துதான் விறகு என்பதும், எலை என்பதிலிருந்துதான் இலை என்பதும், கெளம்பு என்பதிலிருந்து தான் கிளம்பு என்பதும் வந்தனவோ? அந்தோ அளியர்!

பெரும் பிரிவு

தமிழ் வளர்ச்சிக்கென்றே வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுத் தமிழ்ப் பேரறிஞர்களின் இடையே - தமிழ்ப் பெருந்தலைவர்களிடையே தமக்கென ஒரு தனி இடம் பெற்றிருந்த மாணிக்கனார் தமிழின் பெயராலேயே உயிர் நீத்தார். அதாவது:-

புதுச்சேரியிலுள்ள பல்கலைக் கழகத்தின் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நாள் பல்கலைக் கழகத்தினரால் அழைக்கப் பெற்றார். அழைப்பை ஏற்றுப் புதுவைக்கு வந்த இடத்தில் திடீரென மாரடைப்பால் இறுதி எய்தினார்.

பல ஊர்களில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் யானும் இரங்கல் உரையாற்றினேன். அவரது ஆருயிர் அமைதி பெற வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய வியலும்! தமிழில் தொடங்கி தமிழில் முடிந்த வ. சுப. மாணிக்கச் செம்மலின் புகழ் நீடு வாழ்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/203&oldid=1203091" இலிருந்து மீள்விக்கப்பட்டது