பக்கம்:தமிழ் அங்காடி.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  227


பெற்றிருந்தன. பத்துப் பாட்டு எனப்படும் சங்க இலக்கிய நூல்கள் பத்தும் ஆசிரியப் பாவால் ஆனவையே. மற்றும், நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய ஆறு சங்க நூல்களும் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டவையே.

ஈற்றயலடி முச்சீராகவும் மற்ற அடிகள் நாற்சீராகவும் அமைக்கப்படும் நேரிசை ஆசிரியப்பாவே தொல்காப்பியர் காலத்தில் பெரும்பாலும் இருந்தது. முதலடிக்கும் ஈற்றடிக்கும் இடையே, சில அடிகள் முச்சீரால் வருவது சிறுபான்மையாயிருந்தது. இந்தக் காலத்தில் இடையிடையே இருசீரடிகள் கலந்து எழுதும் 'இணைக்குறள் ஆசிரியப்பா’ என்ற வகை அந்தக் காலத்தில் இல்லை. அதாவது, - நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய நூல்களில் உள்ள ஆயிரத்தெழுநூறு ஆசிரியப் பாக்களுள், இடையிலே இருசீரடி கொண்ட இணைக்குறள் ஆசிரியப்பா ஒன்றாவது இல்லை. மற்றும், திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுபடை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, நெடு நல் வாடை, மலைபடு கடாம் என்னும் ஏழு நூல்களிலுங்கூட இணைக் குறள் ஆசிரியப்பா இல்லை. ஆனால், புறநானூறு, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை, பட்டினப் பாலை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களில் இணைக்குறள் ஆசிரியப்பா சிறிது தலைகாட்டியுள்ளது.

மற்றும், இந்தக் காலத்தில் எல்லா அடிகளும் நாற்சீர் உடையனவாக இயற்றப்படும் "நிலைமண்டில ஆசிரியப்பா" என்பது தொல்காப்பியத்தில் கூறப்படாவிடினும், குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்களின் சில பாடல்கள் எல்லா அடிகளும் நாற்சீர் உடையனவாயுள்ளன. இது சிறுபான்மையே - புரிகிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/229&oldid=1204402" இலிருந்து மீள்விக்கப்பட்டது