பக்கம்:தமிழ் அங்காடி.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  229


கொச்சகக் கலி, உறழ் கலி எனக் கலியைத் தொல்காப்பியர் நால்வகைப் படுத்தினார். இக்காலத்தில் வழங்கப்படும் வகைகளைத் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன்.

மா: ஆம் ஐயா, நினைவு இருக்கிறது.

ஆ: பண்டு பரிபாடல் என்னும் ஒருவகைப் பா இருந்தது. அவ்வகைப் பாடல்களால் ஆக்கப்பட்ட நூலே, பரிபாடல் என்னும் சங்க இலக்கியமாகும். தாழிசை, துறை, விருத்தம் என்பன பிற்காலச் சரக்குகள். பண்டு இல்லை.

மா: விருத்தப் பா பற்றியும் கூறுங்கள் ஐயா.

ஆ: விருத்தப் பாவின் ஒவ்வோர் அடியிலும் பத்துச் சீர் வரை இருக்கலாம் என யாப்பருங்கலம் கூறுகிறது. மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்கள் சிலவற்றில் பன்னிரு சீர் அடிகள் உள்ளன. சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், பெரிய புராணம், கந்த புராணம் முதலிய நூல்களில் பல்வேறு பாவினங்கள் உள்ளன. பரஞ்சோதி திருவிளையாடல் புராணம், வில்லி பாரதம், சீறாப் புராணம், தேம்பாவணி ஆகிய நூல்களில் ஆசிரிய விருத்தம் என்னும் பாவினம் இடம் பெற்றுள்ளது. மாம்பழக் கவிராயர், அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் இயற்றிய சீட்டுக் கவிகளிலும், கலம்பகங்களில் வரும் வகுப்பு என்னும் பெயர் கொண்ட பாக்களிலும், இருபத்து நான்கு சீர்கள் கொண்ட அடிகளும், நாற்பத்தெட்டுச் சீர்கள் கொண்ட அடிகளும் உடைய விருத்தப்பாக்களைக் காணலாம்.

16, 17 என எழுத்தெண்ணிப் பாடப்படுவதும் வெண்டளை கொண்டதும் ஐஞ்சீரடிகள் உடையதுமாகிய ‘கட்டளைக் கலித்துறை' என்னும் வகைப் பாடல், கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே தலைகாட்டி விட்டது. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், நம்மாழ்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/231&oldid=1204405" இலிருந்து மீள்விக்கப்பட்டது