பக்கம்:தமிழ் அங்காடி.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  233



மா: தெரிந்து கொண்டேன் ஐயா.

ஆ: இதுபற்றி இன்னொரு செய்தியும் கூறவேண்டி யுள்ளது.

மா: என்ன அது? கூறுங்கள் ஜயா.

ஆ: அணிகளுள் முதன்மையானதும் தலையாயதும், பல அணிகட்குத் தாயானதும் ஆகிய உவமை அணியைப் பற்றி மட்டுமே தொல்காப்பியர் கூறியுள்ளார். அவருங்கூட ‘அணி' என்னும் சொல்லை எங்கும் குறிப்பிட்டாரிலர். பாடல்களில் அமைந்துள்ள அழகுக்கு-சுவைக்கு-நயத்திற்குகற்பனைத் திறனுக்கு - 'அணி' என்னும் பெயர் கூறுவதைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. பேராசிரியர் என்னும் உரையாசிரியர் இதைக் கடுமையாகக் கண்டிக்கிறார். இதற்குக் காரணம், கண்டவரெல்லாம், கண்ட கண்ட கருத்து வெளிப்பாட்டிற்குத் தம் மனம் போன போக்கில் பெயர் கொடுப்பதே யாகும்.

மா: அப்படியா ஐயா!

ஆ: ஆம், மேலும் கேள். ஒருவகைக் கருத்து வெளிப்பாட்டுக்கு ஒருவர் இன்ன அணி எனப் பெயர் தந்தால், அதற்கே மற்றொருவர் வேறு பெயர் தந்துள்ளார். மற்றும், ஒருவர் ஓர் அணி என்று சொல்லும் ஒன்றை, இன்னொருவர் ஓர் அணியாக ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவர் ஒர் அணியைப் பல வகையாகப் பிரிக்கிறார்; ஆனால் வேறொருவர் அந்த வகைகட்கு வேறு வேறு அணிப் பெயர் தருகின்றார். இதனால்தான், தொல்காப்பியர் பல வகைகளையும் அடக்கி 'உவமம்' என்ற ஒரே தலைப்பின்கீழ் விளக்கியுள்ளார். புரிகிறதா?

மா: புரிகிறதையா! உவமை என்னும் ஒன்றே பல வடிவங்கள் பெற்றிருக்கின்றது போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/235&oldid=1204416" இலிருந்து மீள்விக்கப்பட்டது