பக்கம்:தமிழ் அங்காடி.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234  தமிழ் அங்காடி



ஆ: ஆம் ஆம் நன்றாகச் சொல்கிறாய்: 'உவமை' என்னும் ஒரே நாடக மகள், பலப்பல கோலங்கள் கொண்டு - புதுப் புதுக் கோலங்கள் கொண்டு நடிக்கிறாள் என்று சொல்லலாம்.

மா: சரிதான் ஐயா! நீங்கள் சொல்வதே, அழகாக ஓர் அணிபோல் இருக்கின்ற தையா!

ஆ: உண்மைதான்! நான் சொன்னதிலேயே அணி அமைந்திருக்கிறது. அது 'உவமை' அணிதான். இந்த உவமையின் தொடர்பாக 'உருவகம்' என்னும் ஓர் அணி ஒளிந்து கொண்டுள்ளது.

மா: விவரமாக விளக்குங்கள் ஐயா!

ஆ: நான், உவமை அணிக்கு நாடக மகளை ஒப்புமையாகச் சொல்வது உவமை அணியாகும். உவமை அணியையே ஒரு நாடக மகளாகச் சொல்வது உருவக அணியாகும். இதையே வேறோர் எடுத்துக்காட்டால் விளக்குவேன், கேள்.

மா: விளக்குங்கள் ஐயா.

ஆ: ஒருவர் மிகுந்த துயரம் கொண்டிருந்தால், அத்துன்பத்திற்குக் கடலை ஒப்புமையாக்கி, "அவர் கடல் போன்ற மிகுந்த துயரம் கொண்டுள்ளார்" என்று கூறுவது உவமை அணியாகும். இவ்வாறு, ஒப்புமையாகக் கூறும் கடல்வேறு - ஒப்புமை உடையதாக் கூறப்படும் துயரம்வேறு என இரு வேறு பொருளாகக் கூறாமல், துயரத்தையே கடலாக்கி, அதாவது, துயரம் என ஒரு கடல் இருப்பதாகக் கூறி, அதாவது, துயரத்தையும் கடலையும் ஒரே பொருளாகக் கொண்டு, 'அவர் துயரக்கடலில் தோய்ந்தார்’ என்று கூறுவது 'உருவக அணி'யாகும். என்ன...?

மா: நன்றாக விளங்குகிறதையா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/236&oldid=1204417" இலிருந்து மீள்விக்கப்பட்டது