பக்கம்:தமிழ் அங்காடி.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  237


அடங்கியிருக்கும் பொருள் என்ன தெரியுமா? "நான் அவர்களோடு பேச எப்போதும் ஆயத்தமாயிருக்கிறேன் - என்பது அதன் பொருளாகும். இதில் ஒருவகை உவமை இருப்பதை அறியலாம். 'பேச்சுக்கு ஆயத்தம்% என்பதற்குக் ‘கதவு திறப்பு' என்பது ஒருவகை உவமையல்லவா? ஆனால், இதற்கு, அணியிலக்காரர்கள் 'ஒட்டு அணி' எனப் பெயர் தந்துள்ளனர். இரண்டு கருத்துகளும் ஒட்டினாற்போல் - ஒத்தாற்போல் இருப்பதால், இதற்கு ஒட்டு அணி என்னும் பெயர் வழங்கப்பட்டது. இவ்வாறே இன்னும் சில அணிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போகலாம்.

மா: ஆம் ஐயா.

ஆ: அணிகளுக்குள் உவமை அணியும், உருவக அணியும் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இந்தச் சிறப்பு எந்த மொழியிலும் இருக்கக் கூடும். ஆங்கில மொழியில் உவமை அணிக்கு Simile என்னும் பெயரும் உருவக அணிக்கு Metaphor என்னும் பெயரும் தரப்பட்டுள்ளன.

மா: நானும் இந்தப் பெயர்களை அறிந்துள்ளேன் ஐயா.

ஆ: இன்னொரு செய்தி சொல்கிறேன், நான் 1975 ஆம் ஆண்டு, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தங்கி ஒரு திங்கள் காலம் மருத்துவம் செய்து கொண்டேன். கடினமான கட்டம். நான் அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்ட போது, தலைமை மருத்துவர் என்னிடம் பின்வருமாறு கூறினார்:-

“வண்டியை ஷெட்டில் போட்டு விடாதீர்கள். ஆயில் - கீயில் போட்டு ஓட்டிக்கொண்டிருங்கள்" - என்றார் அவர். இது உவமை அணியா? உருவக அணியா? அல்லது ஒட்டணியா? எண்ணிப் பார்த்திடுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/239&oldid=1204424" இலிருந்து மீள்விக்கப்பட்டது