பக்கம்:தமிழ் அங்காடி.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  245


மேலும், மணிமேகலை காப்பியத்தில்-ஊரலர் உரைத்த காதையில் இடம்பெற்றுள்ள-

        "வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக்
        கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
        பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
        தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும்...
        கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை"

என்னும் பாடல் பகுதியும் ஈண்டு எண்ணத்தக்கன.

சிலப்பதிகாரத்தின் அரும்பத உரையாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்: "இசையாவது நரப்படைப்பால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்று ஆகிய ஆதி இசைகள்"- என்பது அவர் கூறியுள்ளது.

...சிலப்பதிகாரத்தின் மற்றோர் உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் பின்வருமாறு கூறியுள்ளார். “இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும், தேவ இருடிநாரதன் செய்த பஞ்ச பாரதீயமும் முதலாக உள்ள தொன்னுால்கள் இறந்தன" - என்பது அவர் கூற்று.

மற்றும் சிகண்டிமுனிவர் இயற்றிய இசை நுணுக்கம், யாமளேந்திரர் இயற்றிய இந்திர காளியம், அவிநயனாரின் படைப்பாகிய பஞ்ச மரபு, ஆதிவாயிலார் படைத்த பரத சேனாபதியம் முதலிய இசை நூல்கள் அடியார்க்கு நல்லார் காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது - இவற்றிலிருந்து சில நூற்பாக்களே மேற்கோளாகக் கிடைத்துள்ளன.

மேற்கூறியவற்றினை நுணுகி நோக்கின், இசைத்தமிழ் நூல்கள் பல்கியிருந்தமை பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/247&oldid=1204440" இலிருந்து மீள்விக்கப்பட்டது