பக்கம்:தமிழ் அங்காடி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுந்தர சண்முகனார் 23


விளையும் பயிர் முளையிலேயே அறிவியல் ஆர்வம் பெறத் தொடங்கிவிட்டது. அவருடைய தந்தை அறிவியல் துணைக் கருவிகளை மகனுக்கு வாங்கிக் கொடுத்து அறிவியல் விளையாட்டு ஆடச்செய்தார். சிற்றப்பா ஜேக் என்பவரும் ஆல்பர்ட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உரம் போட்டார். தாய் இசைப் பயிற்சியும் அளித்தார். ஆல்பர்ட் தன் தங்கை மேயாவுடன் விளையாடுவார்.

மற்ற சிறார்களைப் போல் பொம்மை விளையாட்டு ஆடாமல் அறிவியல் கருவிகளை வைத்துக்கொண்டு அவை பற்றித் தெரிந்து கொள்வதிலேயே ஊக்கம் காட்டினார். பல இடங்கட்கு உலாச் சென்று பல செய்திகளை அறிந்து வருவதும் உண்டு.

ஒரு நாள் திசை காட்டும் கருவியைத் தந்தை தந்தார். ஆல்பர்ட் அதைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து, முள் வடக்கு நோக்கி நிற்பதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என ஆய்வு மனப்பான்மையுடன் எண்ணினாராம்.

கல்வி

தொடக்கக் கல்வி முடிந்தபின் மியுனிச் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். பின் ஆ செள நகரப் பயிற்சிக் கூடத்தில் பயின்றார். அதன்பின், சுரிக் நகரில் உள்ள பல்தொல் நுண் கல்விக் கூடத்தில் (Polytechnic) சேர்ந்து பயிற்சி பெற்றார். இது சுவிட்சர்லாந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தது.

பதவிகள்

பின்னர் வேலை தேடும் படலம் தொடங்கியது. 1902ஆம் ஆண்டிலிருந்து பல்லாண்டு காலம் அரசாங்கத்தில் அலுவலர் பணி புரிந்தார். அலுவலில் இருக்கும்போதே பல புதிய அறிவியல் கட்டுரைகளை ஆய்ந்து எழுதி வெளியிட்டார். இவரது ஆய்வுத்திறனைப் பாராட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/25&oldid=1203081" இலிருந்து மீள்விக்கப்பட்டது