பக்கம்:தமிழ் அங்காடி.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258  தமிழ் அங்காடி


நாடு என ஒன்று இன்றிச் செந்தமிழ் நாடாகவே இருந்து கொண்டிருப்பதற்குக் காரணம், குமரி முதல் வேங்கடம் வரை உள்ளவர்கள், குறிப்பிட்ட இலக்கண நெறியைப் பின்பற்றி எழுதி வருதலேயாகும். இலக்கணம் என்னும் கடிவாளம், தமிழ் இடத்திற்கு இடம் வெவ்வேறு விதமாய்ப் பிய்த்துக் கொண்டு போகாதவாறு இழுத்துப் பிடித்துக் கொண்டுள்ளது.

இல்லாவிடின். தொண்டைநாட்டுத் தமிழ், நடுநாட்டுத் தமிழ், சோழநாட்டுத் தமிழ், கொங்குநாட்டுத் தமிழ், சேர நாட்டுத் தமிழ், தென்பாண்டி நாட்டுத் தமிழ், வடபாண்டி நாட்டுத் தமிழ், நாஞ்சில் நாட்டுத் தமிழ் எனப் பல்வேறு கொடுந்தமிழ்களாகி, இப்பகுதிகள் எல்லாம் கொடுந் தமிழ் நாடுகளாகிவிடும்.

எனவே, எல்லோருக்கும் புரிய வேண்டும் என்னும் பெயரிலும், எளிய நடை என்னும் பெயரிலும் பேச்சு வழக்கை ஒட்டி எழுத்து வழக்கு இருத்தலாகாது. அதாவது, புதிய தமிழ் - சீர்திருத்தத் தமிழ் என்னும் பெயரில் இலக்கணக் கரையை உடைத்துவிடக் கூடாது.

இந்த நிலையில், பேசுவதை ஒட்டி எழுத வேண்டும் என்பதற்கு எதிர்மாறாக நான் சொல்வது, எழுதுவது போல் பேச வேண்டும் என்பதாகும். இது முடியாத செயலன்று. சில-பல ஆண்டுகட்கு முன்பு எழுத்து வழக்கில் கொச்சையான உருவம் தலைவிரித்தாடியது. பின்னர், தமிழறிஞர்களின் இடைவிடா முயற்சியால், இப்போது செய்தி - இதழ்களில் நல்ல தமிழ் எழுதப்படுகிறது. சொற்பொழிவுகள் நல்ல தமிழில் நடைபெறுகின்றன. தொலைக்காட்சி, வானொலி, அரசு அலுவலகங்கள் முதலிய துறைகளில் நல்ல தமிழ் நடைபோடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/260&oldid=1204466" இலிருந்து மீள்விக்கப்பட்டது