பக்கம்:தமிழ் அங்காடி.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  259



நல்ல தமிழில் பேசினால் நல்ல தமிழ் எழுதலாம். நல்ல தமிழில் எழுதினால் நல்ல தமிழ் பேசலாம். நல்ல பேச்சும் நல்ல எழுத்தும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் (Reciprocal) போன்றவை.

எழுத்துக்கு முந்தியது பேச்சு - பேச்சுக்குப் பிந்தியதே எழுத்து. தொடக்கத்தில் பேசியது நல்ல நடையாக இருந்தது. ஆதலின், தமிழில் அந்த நல்ல நடையிலேயே எழுதலாயினர். “ஒழுங்கு படுத்தப்பட்ட திருத்தமான எழுத்து நடை என்பது, ஒழுங்குபடுத்தப்பட்ட திருத்தமான பேச்சு நடையின் விளைவே” - எனக் கிரீனிங் (Greening) என்னும் பேராசிரியர் கூறியுள்ளார். இதைத்தான் "செந்தமிழும் நாப் பழக்கம்" என ஒளவையாரின் தனிப் பாடல் கூறுகின்றது.

தொடக்கப் பள்ளிகளில் புதிதாய் வந்து சேரும் மாணாக்கச் சிறார்கட்கு மொழி கற்பிக்கும் ஆசிரியர், நான்கு விதமான மொழிப் பயிற்சி அளிக்க வேண்டும். அவை: கேள்விப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, படிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி என்பனவாகும். முதல் பயிற்சி கேள்விப் பயிற்சி, ஆசிரியர், பிழையில்லாத தமிழ் நடையில் கதை, விளையாட்டு முதலியவை பற்றிப் பேச வேண்டும். தமிழ் அறிஞர்களை அழைத்துப் பிழையில்லாத நடையில் பேசச் செய்து சிறார்களைக் கேட்கச் செய்ய வேண்டும். பிழையில்லாத ஒலித்தட்டுப் பேச்சு, ஒலி நாடாப் பேச்சு, வானொலிப் பேச்சு முதலியவற்றைக் கேட்கச் செய்ய வேண்டும். அப்படியென்றால்தான் சிறார்களும் பிழை யில்லாத நடையில் பேசுவர். இது உளவியல் முறை (Psychological Method) ஆகும்.

பிறர் பேசுவதைப் பின்பற்றித்தான் குழந்தைகள் மொழி பேச முடியும். மனத்தின் பொதுப் போக்குகளுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/261&oldid=1204467" இலிருந்து மீள்விக்கப்பட்டது