பக்கம்:தமிழ் அங்காடி.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262  தமிழ் அங்காடி


நெடுங்கணக்கிலிருந்து நீக்கி விடும்படி உரையாசிரியர்கள் கூறவில்லை. புதிய மூளைகளின் கண்டுபிடிப்பே இது. ‘ஐ’ என்னும் எழுத்தை நீக்குவதால் புணர்ச்சி விதி குழப்ப மாகிறது. ‘ஒள’ என்பது புதிய எழுத்து இல்லையே. அதிலுள்ள ‘ஒ’ என்னும் வரிவடிவமும் ‘ள’ என்னும் வரிவடிமும் முன்னமேயே உள்ளன. தலைக்கு ஏற்பத் தொப்பியையும் காலுக்கு ஏற்ப மிதியடியையும் சரிசெய்யக் கூடாதா? தலையையும் காலையும் செதுக்கிவிட வேண்டுமா?

அப்போது முன்னோர்கள், எழுத்தை அதாவது வரி வடிவத்தைக் குறைப்பதற்காகவே, ணா, றா, னா எனக் கால்போட்டு எழுதாமல், ளு, ரு, ளு என எழுதினர். நாம் இப்போது கால் போட்டே எழுதலாம் - இதை ஏற்றுக் கொள்ளலாம். ணை, லை, ளை, னை என்பனவற்றிலும் இப்போதுள்ள சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளலாம். அதாவது, ஒரே வரிவடிவத்திற்கு இரண்டு வரிவடிவங்கள் தரப்படுகின்றன. ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.

அடுத்து, - தமிழை உரோமன் எழுத்தாகிய ஆங்கில எழுத்தால் எழுதலாம் என்று சிலர் கூறும் சீர்திருத்தத்தை ஏற்பதற்கில்லை. உரோமன் எழுத்துக்களில் உயிர் மெய் எழுத்து இல்லை - அதனால் தமிழில் 'முருகு’ என்னும் மூன்று எழுத்துக்களால் எழுதும் சொல்லை, ஆங்கிலத்தில் Muruku என ஆறெழுத்துகளாலும் பிரெஞ்சு மொழியில் Mouroukou என ஒன்பது எழுத்துகளாலும் எழுத வேண்டும். எனவே, எழுத்துச் சுருக்கம் கருதி ஆங்கில எழுத்துகளால் எழுதலாகாது. எழுதின், ஆங்கிலத்தில் - உயிரெழுத்தில் குறில் - நெடில் என்னும் பாகுபாடு இன்மையால், நெடுநல்வாடை என்னும் நூல்பெயர் நெடுநாள்வடை (Nedunal vatai)யாகிவிடும். அவ்வாறு ஒருவர் படித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/264&oldid=1204474" இலிருந்து மீள்விக்கப்பட்டது