பக்கம்:தமிழ் அங்காடி.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  269


அல்லது வங்கியில் போட்டுவை என அறிவுரை கூறினர். இது திருவள்ளுவரின் காதில் விழுந்தது. ஐயையோ! பணத்தைப் போட்டுவைக்கும் இடம் வங்கியும் - இரும்புப் பெட்டியும் அல்ல; ஏதும் அற்ற ஏழைகளின் வயிறுகளே பணத்தைப் போட்டு வைக்கும் இரும்புப் பெட்டியாகும் என்றார். இது

        “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
        பெற்றான் பொருள்வைப் புழி"

என்னும் குறளின் விளக்கமாகும்.

ஓர் ஏழை, பெருஞ்செல்வர் ஒருவரிடம் சென்று இரந்து ஓர் உதவி பெற்று வந்தான். ஆனால் அவனுக்கு உள்ளம் அமைதி பெறவில்லை. ஒருவரிடம் சென்று இரக்க நேர்ந்ததே என அவன் நாணினான். இதைத் திருவள்ளுவரிடம் தெரிவித்து வருந்தினான்.

திருவள்ளுவர் அவனுக்கு ஆறுதல் கூறினார். அதாவது நீ இரக்கவில்லை. ஈதலே செய்துள்ளாய். அந்தப் பெருஞ் செல்வர், கனவிலுங்கூட யாருக்கும் இல்லை என மறைக்கார்-மறுக்கார். அப்பேர்ப்பட்ட பெருந்தகையார்க்கு நீ ஈதலே செய்திருக்கிறாய் என்று திருவள்ளுவர் கூறினார்.

நான் அவரிடம் இரந்ததை அவருக்கு ஈந்ததாக எவ்வாறு நீங்கள் கூறுகிறீர்கள்? என வினவினான் அவன்.

திருவள்ளுவர் கூறினார். நீ அவரிடம் இரந்து பெற்றதன் வாயிலாக, அவருக்குப் பேரும் புகழும் புண்ணியமும் அறப்பயனும் உண்டாகும்படிச் செய்துள்ளாய். அதனால், நீ அவரிடம் இரந்தது அவருக்கு ஈதலேயாகும் என்றார். இது,

        “இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
        கனவினும் தேற்றாதார் மாட்டு"

என்னும் குறளின் விளக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/271&oldid=1204486" இலிருந்து மீள்விக்கப்பட்டது