பக்கம்:தமிழ் அங்காடி.pdf/275

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  273



இவ்வாறாகக் கருத்துகளைக் காரசாரமாக வெளிப் படுத்தியுள்ளார். அதே நேரத்தில் அமைதியான முறையிலும் அறிவுரைகள் பல அளித்துள்ளார்:சில:

"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்
"எண்ணித் துணிக கருமம்
"இடுக்கண் வருங்கால் நகுக.
“செய்க பொருளை"-எனப் பலவாகும்

வள்ளுவர் சிலவற்றைக் கட்டாயப் படுத்துவதும் உண்டு. கல்வியைக்(Compulsory Education) கட்டாயப்படுத்துகிறார்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

இந்தக் குறளில் உள்ள 27 எழுத்துகளுள் 23 வல்லின எழுத்துகள் இடம்பெற்றுக் கல்வியை வலியுறுத்திக் கட்டாயப் படுத்துகின்றன. எழுத்தெண்ணிப் படித்தல் என்றால் இதுதானோ?

கூழின் வரலாறு

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்புகளும் நிரம்பப் பெற்றிருப்பவன், அரசர்கட்குள் எல்லாம் பெரிய அதாவது பேரரசனாக விளங்குவான் என வள்ளுவர் கூறியுள்ளார்.

“படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு"

என்பது குறள். இங்கே கூழ் என்பது உணவை - உணவுப் பொருள்களைக் குறிக்கும். அந்தக் காலத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளிலும் உணவு கூழ்தான். கூழ் என்பதோடு 'உ’ சாரியை சேர்த்துக் கூழு என்கிறோம். தமிழில் உள்ள ழகரத்தின் இடத்தைச் சில இடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/275&oldid=1204490" இலிருந்து மீள்விக்கப்பட்டது