பக்கம்:தமிழ் அங்காடி.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276  தமிழ் அங்காடி


அதாவது இடத்திற்கு இடம் இல்லாத பொருள்களை மாற்றிக்கொள்வது இரண்டாவதாகும்: மூன்றாவது ‘பகிர்வு’, (Distribution) ஆகும். உண்டாக்கப்பட்ட பொருள்களோ-அவற்றால் ஆன ஊதியமோ பலர்க்கும் கிடைக்கும்படிப் பங்கீடு செய்வதே பகிர்வு ஆகும். முதல் வைத்தோர்க்கும் உழைப்பு தந்தவர்க்கும் இயக்கும் அமைப்புக்கும் (organization) உரிய பங்கு கிடைக்குமாறு பகிர்வு செய்யவேண்டும். வருவாயைச் சமூக மக்களிடையே பரவலாகப் பங்கீடு செய்யவேண்டும் என்பது கார்ல்மார்க்சின் (மார்க்சிசம் - marxcism) கொள்கையாகும். மேற்சொன்ன அமைப்பைத்தான்,

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு’

என்னும் குறள் கோடிட்டுக் காட்டுகிறது.

இயற்றலும் ஈட்டலும் என்பன உண்டாக்கத்தையும் மாற்று என்பதையும் குறிக்கின்றன. காத்தல் என்பது, இடையில் உள்ள முதலைகள் விழுங்கி ஏப்பம் விடாத படிக் காக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. வகுத்தல் என்பது, பொதுவுடைமைக் கொள்கைகளுள் இன்றியமையாததான பகீர்வை-பங்கீட்டை (Distribution) குறிக்கிறது.

இதுகாறும், திருவள்ளுவரின் பொருளியல் கொள்கை சுருக்கமாகச் சொல்லப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு துறையையும் துருவிப் பார்ப்போமாயின் அணுவுக்குள் ஆழ்கடலாகத் திருக்குறள் விளங்குவது புலனாகும்.

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”

- ஒளவையார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/278&oldid=1204495" இலிருந்து மீள்விக்கப்பட்டது