பக்கம்:தமிழ் அங்காடி.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30  தமிழ் அங்காடி


இராமனும் விளையும் முளைப் பருவத்தில் இசையில் ஆர்வம் காட்டினார்.

இசை ஒரு பொழுது போக்கே என எண்ணினார்; உலகம் காக்கும் அறிவியல் ஆய்வுக்குச் செல்ல வேண்டும் என இராமன் விரும்பினார். இவருடைய தந்தையார் விசாகப்பட்டினம் இந்துக் கல்லூரியிலும் வேறு சில கல்லூரிகளிலும் கணிதப் பேராசிரியராகப் பணி புரிந்தார். தந்தையைப் போலவே தாமும் விளங்க வேண்டும் என்பது மகன் விருப்பம்.

கல்விப் பயிற்சி

இராமன் சென்னை அரசினர் கல்லூரியில் பயின்று பதினாறாம் அகவையில் பி.ஏ. பட்டம் பெற்ற பின் மேலும் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்து படித்தார். 18 ஆம் வயதில் முதல் வகுப்பில் எம்.ஏ. தேறினார்.

இவர் கல்லூரியில் படித்தபோதே அறிவியல் ஆய்வில் ஆர்வம் காட்டினார். பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி மேலை நாடுகட்கு அனுப்பிப் பாராட்டப் பெற்றார். இலண்டனுக்கு வந்து படிக்கும்படி இவர் அழைக்கப் பெற்றார். ஆனால் அங்கே செல்வதற்குச் சூழ்நிலை இடம் தரவில்லை.

பதவிகள்

இவர் பொருளியலில் முதல் வகுப்பில் தேறியதால் கல்கத்தாவில் டெபுடி அக்கெளன்டண்ட் ஜெனரல் பதவி கிடைத்தது. மேலும் கிடைத்தவை: 1907-நாணயப் பதவித் தலைவர். 1911 வரை இரங்கூன் நாணயக் கணிதத் தலைவர். பின் நாகபுரியில் அஞ்சல் துறையில் வரவு செலவுத் தலைவர். இவ்வாறு பல பதவிகள் தேடி வந்தன. (இரங்கூனைத் தலைநகராகக் கொண்டிருந்த பர்மா அப்போது இந்தியாவைச் சேர்ந்திருந்தது).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/32&oldid=1203067" இலிருந்து மீள்விக்கப்பட்டது