பக்கம்:தமிழ் அங்காடி.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38  தமிழ் அங்காடி


என்று முன்பு எண்ணினாள் அல்லவா? பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள் அவள்,

சிவனால் உருவம் இழந்த மன்மதன், அன்று தொட்டு இன்று வரை அருந்தவம் இயற்றி மீண்டும் இந்த வடிவம் கொண்டு வந்து விட்டானோ - என எண்ணிப் பார்க்கிறாள்.

       "கற்றையஞ் சடையவன் கண்ணின் காய்தலால்
       இற்றவன் அன்று தொட்டு இன்று காறுந்தான்
       நற்றவம் இயற்றி அவ் அருங்கன் கல்லுருப்
       பெற்றனனாம் எனப் பெயர்த்தும் எண்ணுவாள்" (13)

சடையவன் = சிவன், இற்றவன். உடம்பு இற்றுப் போன மன்மதன், அநங்கன் = உடம்பு இல்லாதவன் (மன்மதன்). ந + அங்கன் = உடம்பு இல்லாதவன். இது சமசுகிருதப் புணர்ச்சி முறை, இந்தோ ஐரோப்பிய இன மொழிகளுள் சில அல்லது பலவற்றில் ‘ந’ என்பதற்கு இல்லை என்பது பொருள். இலத்தீனிலும் பிரஞ்சிலும் Non (நொ[ன்]) என்பர். ஆங்கிலத்தில் No (நோ-ந) என்பர். வடமொழியிலும் இந்தியிலும் ‘ந’ என்பர். ந என்பதன் பக்கத்தில் (அநங்கன்) ந + அங்கன் என உயிர் முதல் வருமொழிவரின், ந என்பது (ந் + அ) அந்’ என்றாகும். பின் அந் + அங்கன் = அநங்கன் என்றாகிறது. எனவே, அனங்கன் என்று சிலர் எழுதுவது பொருந்தாது. அநங்கன் என்று கம்பரைப்போல் எழுதுவதே திருத்தமானது.

மேலும் எண்ணுகிறாள்: சிவனுடைய இரண்டு தோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை. அதுபோலவே, இவனதுமார்பின் பரப்பையும் ஒரே நேரத்தில் காண முடியவில்லை. அவ்வாறு காண்பதற்கு கண்கள் போதவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தோள்களின் இடைவெளியும் மார்பின் பரப்பும் விரிந்துள்ளனவாம்:

       "தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
       நீளியஅல்ல கண், நெடிய மார்பு என்பாள்” (16)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/40&oldid=1203036" இலிருந்து மீள்விக்கப்பட்டது