பக்கம்:தமிழ் அங்காடி.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  41


அணிந்தும் அழகு பெறாத அணிகள், சீதை தோன்றியதால் இவ்வாறு அழகு பெற்றதாக மிதிலைக் காட்சிப் படலத்தில் கூறப்பட்டிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது.

       “இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே
       மழைபொரு கண்ணிணை மடங்தை மாரொடும்
       பழகிய எனினும் இப்பாவை தோன்றலால்
       அழகு எனும் அணியும் ஓர் அழகு பெற்றதே” (34)

ஈகலான் புகழ்

கம்பர், வாய்ப்பு நேரும்போ தெல்லாம், மக்களுக்கு அறிவுறுத்தித் திருத்தும் கருத்துகளை மெல்லப் புகுத்துவதில் வல்லவர். சூர்ப்பணகை வர வரத் தனது கற்பு நிலையினின்றும் தாழ்ந்து கொண் டிருந்தாளாம். இந்த நிலைக்கு உவமையாகக் கருமியின் புகழைக் குறிப்பிட்டு உள்ளார்:

        "ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
        காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள்" (26)

எவ்வளவோ புகழ்ந்து கேட்பினும அன்போடு ஒன்றும் உதவாமல் பொருளைக் காத்துக்கொண் டிருப்பவனது புகழ் போல் அன்ாவது கற்பு தேய்ந்ததாம்.

பொருள் காத்தவன் புகழ் என்பது இகழ்தான். தொடக்கத்தில் அவனிடம் பொருள் சேரத் தொடங்கிய போது இவன் பயன்படுவான் என எண்ணி மக்கள் புகழத் தொடங்கியிருக்கக் கூடும். செல்வம் இருப்பதனால் எல்லாரும் வருக வருக என வரவேற்றிருக்கக் கூடும். பின்னர் அவன் ஈயா முட்டிக் கருமி எனத் தெரியத் தொடங்கியதும், அவனது செல்வப் புகழ் சிறிது சிறிதாகத் தேய்ந்து இகழ் என்னும் பெயருக்கு உரியதாகி விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/43&oldid=1202454" இலிருந்து மீள்விக்கப்பட்டது