பக்கம்:தமிழ் அங்காடி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  51



இவ்வாறாக, தன் மரபினர் தெய்வத் தன்மையும் செல்வமும், பெரிய துணையும் பெரிய மறமும் பெரிய அரசுரிமையும் உடையவர்கள் எனப் புகழ்கிறாள்.

சூர்ப்பனகை என்னும் தன் பெயரைச் சொன்னால் அரக்கி என்று தெரிந்துவிடும் எனக் காமவல்லி என்னும் பெயரைக் கூறியுள்ளாள். உண்மையில் காமவல்லியே.

மற்றும். அவள் கணவனை இழந்த விதவையாதலின், அதை மறைக்கத் தன்னைக் கன்னி எனக் கூறிக் கொள்கிறாள்.

இராமன் கேட்டவற்றுள் பேரையும் உறவினரையும் கூறி விட்டாள் - ஊரைக் குறிப்பிடவில்லை. அவள் இப்போது இந்த வனத்துக்கு அரசியாயிருப்பதால் எந்த ஊரைச் சொல்வது? இராவணன் தங்கை என்றாலே போதுமே இடம் தானே தெரியவரும்

வினா விடை

இராமன் அரக்கியை நோக்கி, நீ இராவணன் தங்கை என்கிறாய். உனக்கு இந்த உருவம் வந்தது எவ்வாறு என்று வினவினான். எனக்கு அரக்கர்களைப் பிடிக்காமையால் இங்கு வந்து தவசியரோடு சேர்ந்து தவம் செய்து இந்த உருவம் பெற்றேன் என்றாள்.

நீ வந்த நோக்கம் என்ன என்று இராமன் வினவ, தங்கள் காம நோயை ஆடவரிடம் தாங்களே உரைப்பது நற்குல மங்கையர்க்கு அழகு அன்று; இருப்பினும், தூது அனுப்ப எனக்கு வேறு துணையின்மையால் யானே கூறுகின்றேன். காமன் செய்யும் துன்பத்தைத் தீர்க்க வேண்டுகிறேன் என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/53&oldid=1202420" இலிருந்து மீள்விக்கப்பட்டது