பக்கம்:தமிழ் அங்காடி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52  தமிழ் அங்காடி


        “தாமுறு காமத் தன்மை தாங்களே
            உரைப்ப தென்பது
        ஆமெனல் ஆவதன்றால் அருங்குல
            மகளிர்க்கு அம்மா!
        ஏமுறு உயிர்க்கு நோவேன்
            என்செய்கேன் யாரும் இல்லேன்
        காமன் என்று ஒருவன் செய்யும்
            வன்மையைக் காத்தி என்றாள்" (45)

ஆடவரிடம் தாமாகச் சென்று மோதமாட்டார்கள் யார்? குல மகளிர் - எத்தகைய குலமகளிர்? அருங்குல மகளிர் - என்னும் கருத்து வெளிப்பாடு உலகியல்பை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

யானும் அருங்குல மகளே! ஆனால், நானே சொல்லாமல் தூது அனுப்ப யாரும் இல்லேன்’ என்று திறமையுடன் பேசிப் பார்க்கிறாள்.

பலரும் சில சூழ்நிலைகளில் தங்கள் மேல் குறை சொல்லாமல், வேறொன்றின்மேல் குறையை ஏற்றிச் சொல்வார்கள். அதாவது, இரயில் தவறி விட்டது - தரை வழுக்கி விட்டது என்பது போலவாகும். இவர் காலம் கடந்து போனார் - இவர் விழிப்புடன் நடக்கவில்லை. ஆனால், இரயில் மேலும் தரைமேலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அதுபோல் உள்ளது அரக்கியின் பேச்சு.

அதாவது, - இவளாகக் காம விருப்பம் கொள்ள வில்லையாம். காமன் (மன்மதன்) வன்முறையில் இவளுக்குக் காம உணர்வு உண்டாகச் செய்கின்றானாம். அவனது வன்செயலிலிருந்து தன்னைக் காக்க வேண்டுகிறாள். அந்தப் பேர்வழி இப்படிச் செய்கிறான் என மட்டமாய்க் குறிப்பிடுவது போல், காமன் என்று ஒருவன்’ எனக் குறிப்பிட்டு உள்ளாள். இது கம்பனது கைச்சரக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/54&oldid=1202423" இலிருந்து மீள்விக்கப்பட்டது