பக்கம்:தமிழ் அங்காடி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64  தமிழ் அங்காடி



முன்பெல்லாம் போரிலே, எதிரி வீரர்களின் மூக்குகளையும் பெண்களின் மூக்குகளையும் அரிவது உண்டு. எதிர்த் தலைவனுக்கு அரிந்த மூக்குகளை (பார்சல்) அனுப்புவதும் உண்டு என வரலாற்றில் படித்திருக்கலாம்.

சிறுபிள்ளைகள் குறும்பு செய்தால், பெரியவர் தம் மூக்கின்மேல் தம் கையை வைத்து அரிவதுபோல் காட்டி, இப்படி மூக்கை அரிந்து விடுவேன் என்று மிரட்டுவதுண்டு.

ஒருவர் ஓரிடத்தில் மானக்கேடு அடைந்து வரின், அவர் அங்கே 'மூக்கு அறுபட்டு வந்தார்’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. இதை ஆங்கிலத்தில் Nose cut என்பர்.

உறுப்புகளுள் முக்கு அழகு அளிக்கும் ஒரு சிறந்த உறுப்பாகும். தீய காற்றை வெளியே விட்டு, நல்ல காற்றை (உயிரகத்தை) உள்ளே இழுத்து உயிர் காப்பதல்லாமல் அழகும் தரும் உறுப்பு அது. பெண்ணோ அல்லது பிள்ளையோ, முக்கும் முழியுமாய் (விழியுமாய்) நன்றாக இருப்பதாகக் கூறும் வழக்கமும் உண்டு. முக்கு எடுப்பாய் இல்லாதவரைச் சப்பை முக்கு சப்பான் முக்கு முக்கரையன் என்றெல்லாம் கேலியாய்ப் பேசுவதும் உண்டு.

இத்தகைய முக்கு அறுபட்டு மானக்கேடு அடைந்தாள் அரக்கி.

காது அறுப்பு

மூக்கை அறுத்து விடுவார்களா என்று சொல்வது போலவே காதை அறுத்து விடுவார்களா என்று சொல்லுவதும் உண்டு. நீ இதைச் செய்து விடுவாயே யாயின் நான் என் காதை அறுத்துக் கொள்கிறேன் - என் மீசையைச் சிரைத்துக் கொள்கிறேள் என்று சிலர் சூள் உரைப்பதைக் கொண்டு காது அறுப்பு பற்றியும் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/66&oldid=1202336" இலிருந்து மீள்விக்கப்பட்டது