பக்கம்:தமிழ் அங்காடி.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78  தமிழ் அங்காடி


இலக்குவன் இராமனிடம் பணிவுடன், ஆணையிட வேண்டுகிறான். இங்கும் இராமன் உயர் பண்பை இழக்கவில்லை. நீ சொல்வது சரிதான் - அவள் போகவில்லை எனில் செய்யலாம் என நயமாகப் பதில் இறுத்தான்.

பின்னர் அரக்கி, இவர்கள் இரக்கப்பட மாட்டார்கள்நம்மைக் கொன்று விடுவர் - இங்கே நிற்கக் கூடாது - என்ற முடிவுக்கு வந்தாள்.

அரக்கியின் சூள்

மூக்கு, காது, முலை ஆகியவற்றை இழந்து யான் மானத்தோடு எப்படி வாழ்வேன்? ஏ மானிடரே! இவ்வளவு நேரம் உங்கள் உள்ளத்தை அறிய வஞ்சகமாகப் பேசி நடித்தேன். இன்னும் சிறிது நேரத்தில், காற்றினும் கனலினும் கடியவனும் கொடியவனும் உங்கட்கு எமனும் ஆகிய கரனைக் கொண்டு வருவேன் எனச் சூள் உரைத்து அவ்விடத்தினின்றும் பெயர்ந்தாள்:

             "ஏற்ற நெடுங் கொடிமூக்கும் இருகாதும்
                 முலை இரண்டும் இழந்தும் வாழ
             ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ளப்
                 பரிசறிவான் அமைந்த தன்றோ
             காற்றினிலும் கனலினிலும் கடியானைக்
                 கொடியானைக் கரனை உங்கள்
             கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன்
                 என்று சலம் கொண்டு போனாள்" (143)

மிஞ்சினால் கெஞ்சுவது - கெஞ்சினால் மிஞ்சுவது என்ற முறையிலும், இச்சீ! இந்தப் பழம் புளிக்கும் என்ற முறையிலும், தன் எண்ணம் கைகூடாமல் வஞ்சினம் கொண்டு சூர்ப்பணகை சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/80&oldid=1202309" இலிருந்து மீள்விக்கப்பட்டது