பக்கம்:தமிழ் அங்காடி.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  81



                "இட்டது இவ்அரியணை இருந்தது என் உடல்” (12)

எல்லாம் போன பின்னும் நாணமின்றி உண்டு நுகர்ந்து நாம் உள்ளோம். இன்னும் நாம் பிறக்கவில்லை என்று சொல்லும் அளவுக்குப் பழியில் மூழ்கினோம்.

                "பிறந்திலம் என்னும் பேறலால்
                முற்றுவது என்இனிப் பழியின் மூழ்கினோம்" (14)

மறச் செயல் இன்றி மானம் கெட்டு வாழ்வது, நாம் இன்னும் பிறக்கவே இல்லை - அதாவது - இவ்வுலகில் நாம் இல்லை என்று பொருள்படும் என்பதாக இராவணன் கூறியுள்ளான்.

மானமுள்ள போர் மறவன், தான் பிறந்த நாள் முதல் இருக்கும் நாள்வரை எண்ணிக் கணக்கிட்டு, அந்நாள்களுள் தான் விழுப்புண்படாத நாள்களை எல்லாம் கழித்து விட்டு, மீதி நாள்களை 365 என்னும் எண்ணால் வகுத்துப் பார்த்து வரும் ஈவு எண்ணைக் கொண்டு இத்தனை ஆண்டுகள்தாம் வாழ்ந்திருக்கிறோம் என்று முடிவு செய்வானாம். நாற்பது அகவை உடையவனாயிருப்பினும், விழுப்புண்படாத காலம் பத்தாண்டா யிருப்பின், நாற்பதில் பத்தைக் கழித்து முப்பது அகவை உடையவனாகவே முடிவு செய்வானாம். இது,

                "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
                வைக்கும்தன் நாளை எடுத்து” (776)

என்னும் குறளின் விரிவுரையாகும்.

திருக்குறள் மறவன் விழுப்புண் படாத நாள்களைக் கழித்து விடுவான். இராவணனோ, இதுவரையும் எத்தனையோ போர்களை வென்றிருப்பினும், இப்போது நேர்ந்துள்ள மானக்கேட்டால், வென்ற நாள்கள் முதல் எல்லா நாள்களையும் கழித்து, இன்னும் பிறக்கவே இல்லை என்ற பொருளில் பேசியுள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/83&oldid=1202354" இலிருந்து மீள்விக்கப்பட்டது