பக்கம்:தமிழ் அங்காடி.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88  தமிழ் அங்காடி


'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’, ‘பள்ளிக்கல்வி புள்ளிக்கு உதவாது' என்னும் முதுமொழிகள் துணைபுரியும். இந்தப் பாடலால், கம்பரின் நூலறிவும் மதிநுட்பமும் புலனாகின்றன.

கண்ணில்லான் ஓவியம்

மீண்டும் விபீடணன் இந்திரசித்தை நோக்கிக் கூறலானான்: சிறுவனே, ஒவியப் புலமையும் கண்களும் இல்லாதவன் ஒவியத்தைத் தீட்டித் திருத்துவான் என்பது பொருந்தாதது போல உன் பேச்சும் உள்ளது. அகவையும் பட்டறிவும் மிக்க பெரியோர் இருந்து ஆய்வு செய்யும் அவையில் நீயும் இருக்கின்றாயே, சிறு பிள்ளைத்தனத்தால் எது முறை என்பதை எண்ணவில்லை நீ.

                "கருத்திலான் கண்ணிலான் ஒருவன் கைக்கொடு
                திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்
                விருத்த மேதகையவர் வினைய மந்திரத்து
                இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய்,'
(67)


கருத்து = கலையறிவு. விருத்தம் = முதுமை. மேதகையவர் = மேலோர். வினையம் = சூழும் செயல். இங்கே மந்திரம் என்பது, சூழும் அவையிடத்தைக் குறிக்கிறது.

இங்கே கூறப்பட்டுள்ள உவமை சுவையானது. வண்ண ஒவியம் தீட்டுவதற்குத் தெளிவான கண்பார்வையும், ஓவியக் கலையறிவும், வண்ணக் குழம்பும் தூரிகையும் வேண்டும். இவற்றுள் ஒன்றும் இல்லாதவன் தன் வெற்றுக் கைகளைக் கொண்டு மட்டும் திருத்தமான ஒவியம் தீட்டல் முடியாது. இதுபோல், இராவணனின் மகன் என்ற ஒன்றைத் தவிர, வேறு அரசியல் அறிவு யாதும் இல்லாதவன் இந்திர சித்து என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/90&oldid=1202393" இலிருந்து மீள்விக்கப்பட்டது